கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்த வழக்கு - 21 ஆண்டாக தேடப்படும் சபீரின் மனைவியிடம் விசாரிக்க முடிவு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை பிரஸ் கிளப் வளாகத்தில் குண்டு வைத்த வழக்கில் தொடர்புடைய சபீரின் மனைவி பௌசியாவிடம் விசாரணை நடத்த கோவை சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த கோவை பிரஸ் கிளப் அலுவலகத்தில், 2002-ல் வெடிக்காத நிலையில் குண்டு கைப்பற்றப்பட்டது.

போலீஸார் விசாரணையில், 1998-ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்துல்நாசர் மதானி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சபீர், பிரஸ் கிளப்பில் குண்டுவைத்தது தெரியவந்தது.

காஷ்மீர் தீவிரவாத தொடர்பு: இந்த வழக்கில் தேடப்படும் சபீர் கடந்த 21 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், 2008-ல் ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குழு புகைப்படத்தில் சபீர் இருப்பதும், அவருடன் தீவிரவாதிகள் போன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

கடந்த 2008-ல் டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு சபீர், மனைவி பௌசியாவுடன் சென்றுள்ளார். லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு ஆட்கள் சேர்க்க அவரது மனைவியும் உறுதுணையாக இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பௌசியா இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, கேரள மாநிலம் வயநாட்டில் வசித்துவருகிறார். என்ஐஏ அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பௌசியாவிடம் கோவை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE