நிர்வாகத் தலையீட்டை சட்டரீதியாக ஏற்க முடியாது: ஆளுநர் ஆட்சி இல்லை; மக்களாட்சி நடக்கிறது - சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கருத்து

By ஆர்.பாலசரவணக்குமார்

தமிழகத்தில் இப்போது ஆளுநர் ஆட்சி நடைபெறவில்லை. மக்களாட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே தமிழக ஆளுநர் தனக்குள்ள அதிகார வரம்பை மீறி செயல்படக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தற்போது தடாலடியாக தமிழக அரசின் செயல்பாடுகளில் நிர்வாக ரீதியாக தலையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சிலர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத்: ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். ஆனால் முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதன் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு என்பது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. அசாதாரண சூழலில் ஆட்சி கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி நடைபெற்றால் மட்டுமே ஆளுநர் நிர்வாகத்தை தன் கையில் எடுத்து செயல்பட முடியும். இதேபோன்று தான் டெல்லியிலும் கெஜ்ரிவால் அரசுக்கு ஏகப்பட்ட இடையூறுகளை அந்த மாநிலத்தின் ஆளுநர் கொடுத்தார். ஆனால் அதுபோல ஆளுநர் மாநில அரசின் செயல்பாடுகளில் நிர்வாக ரீதியாக தலையிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசியலமைப்பு சட்ட ரீதியாக தவறு நடந்துள்ளது, இல்லை சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றால் மட்டுமே ஆளுநர், அந்த அரசிடம் கேள்வி கேட்டு சட்டத்துக்குட்பட்டுத்தான் செயல்பட முடியுமே தவிர நேரடியாக களத்தில் குதிக்க முடியாது. ஆனால் அவர் அமைச்சர்களுடன் சேர்ந்து ஆய்வு நடத்தலாம். அதில் தப்பில்லை.

மூத்த வழக்கறிஞர் பி.குமார்: அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநரின் அதிகாரத்துக்கும், துணை நிலை ஆளுநரின் அதிகாரத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு ஆளுநரைப்போல துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது. ஆளுநரின் அதிகாரமும், செயல்பாடுகளும் இடத்துக்கு தகுந்தாற்போல் மாறுபடும். ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் போல இருக்க முடியாது. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது குறித்து எந்த லட்சுமண ரேகையும் சட்டத்தில் சரிவர குறிப்பிடப்படவில்லை. அதேசமயம் அவர் ஆட்சி நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா என்பதும் சந்தேகத்துக்குரியது.

இதை எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் விரிவாக விவாதித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் சட்டமும் ஆளுநரின் தலையீடு ஆட்சி நிர்வாகத்தில் இருக்கவே கூடாது என்கிறது. ஆனால் ஒரு சட்டத்தை திருப்பி அனுப்பவோ, அல்லது ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய அனுமதி வழங்கவோ அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது.

மூத்த வழக்கறிஞர் ஆர்.தியாகராஜன்: இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 153-ன்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆளுநர்தான் அம்மாநிலத்தின் அரசுத் தலைவர். ஆளுநருக்கு சட்ட ரீதியாக உதவ முதல்வரும், அமைச்சர்களும் உள்ளனர். அமைச்சரவையுடன் சேர்ந்து சட்டம் இயற்றும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. ஆனால் இந்த அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு கிடையாது. இவை சம்பிரதாயப் பதவிகள்தான்.

ஆட்சியில் எக்காரணம் கொண்டும் ஆளுநர்களோ, துணை நிலை ஆளுநர்களோ பங்கெடுக்க முடியாது. அதிகாரங்கள் அனைத்தும் ஆட்சியாளர்களிடமே உள்ளது. சட்ட ரீதியாக ஆளுநர் பெரியவரா இல்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி பெரியதா என்றால் ஆட்சியாளர்கள்தான் அதிகாரமிக்கவர்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்