‘இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்’- கல்லறை கட்டிவைத்து காத்திருக்கும் ரோஸி!

By என்.சுவாமிநாதன்

சை, ஆசையாய் புது வீடு கட்டுபவர்களை பார்த்திருப்போம். ஆசையுடன் வீட்டு வாசலில் தனது கல்லறையைக் கட்டி, அதனோடே தன் வாழ்வியலை தகவமைத்துக் கொண்டவரை பார்த்தது உண்டா? தமிழக - கேரள எல்லைப் பகுதியான பள்ளுகுழி கிராமத்தில் வசிக்கும் ரோஸி அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

‘சாகப் போற நாள் தெரிஞ்சுட்டா வாழும் நாட்கள் நரகமாயிடும்’ ரஜினியின் இந்த சினிமா வசனத்தை ஆமோதிக்காதவர்கள் இருக்க முடியாது. ரோஸிக்கு தனக்கு எப்போது இறப்பு வரும் என்று தெரியாது. ஆனால், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அதனால்தான் தனது வீட்டு வாசலில் தனக்கான கல்லறையை தானே கட்டி வைத்திருக்கிறார்.

நூறு நாள் வேலைக்குப் போகிறவர் என்பதால் மாலையில் போனால் தான் ரோஸியைப் பார்க்க முடியும் என்று சொன்னார்கள். நாம் போயிருந்த ஞாயிற்றுக் கிழமையிலும் ரோஸி வீட்டில் இல்லை. மாலை 6 மணிப் போல வந்து சேர்ந்தவர், “இன்னிக்கு நூறு நாள் வேலை கிடையாது. அதனால பக்கத்துல அண்டி ஆபீஸுக்கு (முந்திரி தொழிற்சாலை) வேலைக்கு போனேன். தினமும் இப்படி ஏதாச்சும் ஒரு கூலி வேலைக்குப் போறதுதான். அதிகமா போன அம்பது ரூபா கிடைக்கும். வயசாகுதுல்ல.. அதனால முன்ன மாதிரி சூட்டிக்கையா வேலை பார்க்க முடியல” என்றபடியே தனது கல்லறையின் மீது வாகாய் அமர்ந்து கொண்டார்.

“உயிருடன் இருக்கும் போதே அதுவும் வீட்டு வாசலில் இப்படி உங்களுக்கு நீங்களே கல்லறை கட்டிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்துச்சு?” என்று கேட்டதுமே மளமளவென பேசத் தொடங்கினார் ரோஸி. “என்னோட அப்பா அப்பியன் நான் குமரிப் பொண்ணா இருக்கிறப்பவே இறந்துட்டாரு. அவரும் கூலி வேலைதான் பார்த்துட்டு இருந்தாரு. என்கூட பொறந்தவங்க ஒரு அண்ணன்; நாலு அக்காமாருங்க. நான் தான் கடைக்குட்டி. ரெண்டாம் கிளாஸ் வரைக்கும் படிச்சுருக்கேன். அதுக்கு மேல ஏன் படிக்க வைக்காம விட்டாங்கன்னு தெரியல.

என்னை ரணமா குத்துச்சு

அப்பா போனதும் அம்மாதான் எங்களுக்கு ஆதரவா இருந்தாங்க. அவங்களும் நாலு வருசத்துக்கு முந்தி கண்ணை மூடிட்டாங்க. சின்னப் பொண்ணா இருக்கப்பவே என்னைய கல்யாணம் பண்ணிக்கச் சொன் னாங்க. ஆனா, எனக்கு கல்யாண ஆசையே இல்ல; அதனால மறுத்துட்டேன். ஆன்மிகத்துல நாட்டம் அதிகமாகிட்டதால ஏசுவே ரட்சியும்னு இருந்துட்டேன்.

பக்கத்துல செறுக்குழி தான் நான் பொறந்த ஊரு. இங்க பள்ளுகுழியில் எனக்கு ஏழரை சென்ட் இடம் இருந்துச்சு. அதுல, 6 சென்ட் இடத்தை வித்துட்டு மீதி இடத்துல சின்னதா ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சேன். அப்ப சிலபேரு, ‘யாரும் ஆதரவில்லாம ஒண்டிக் கட்டையா கெடக்கிற நீயெல்லாம் செத்துப் போனா தூக்கி அடக்கம் பண்ண யாரு இருக்கா?’ன்னு குத்தலா கேட்டாங்க. அது என்னை ரணமா குத்துச்சு. அப்படி கேட்டதுலருந்து தினமும் அதைப் பத்தியே யோசிச்சுட்டு இருந்தேன்.

வருத்தம் எனக்கு இல்லை

உடனே, கட்டுன வீட்ட பாதியில போட்டுட்டு வீட்டு வாசல்லயே எனக்கு கல்லறை கட்டுறதுக்காக மேஸ் திரிய கூட்டிட்டு வந்து குழிவெட்ட ஆரம்பிச்சேன். பணத் தட்டுப்பாடா இருந்ததால நானும் அவரோட ஊட மாட இருந்து வேலை செஞ்சு கல்லறையைக் கட்டி முடிச்சுட்டேன். நான் இறந்துட்டா எனது உடலை சவப் பெட்டியில வெச்சு, இந்தக் கல்லறையோட பக்கத்துச் சுவரை இடிச்சுட்டு ஈஸியா உள்ள தள்ளுறாப்புல கல்லறையை வடிவமைச்சு வெச்சிருக்கேன். இதக் கட்டிமுடிக்க 50 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. கல்லறையை கட்டி முடிச்சதும்தான் அது மழையிலும் வெயிலிலும் கிடப்பது புரிஞ்சுது. ஊருக்காரங்க சொன்ன மாதிரி எனக்குப் பின்னால இதையெல்லாம் யார் எடுத்துப் பார்ப்பான்னு நினைச்சேன். உடனே, ஆஸ்பெஸ்டாஸ் கூரையால கல்லறைக்கு மேல்கூரை போட்டுட்டேன்.

கையில மடியில இருந்த பணத்தையெல்லாம் போட்டு கல்லறையக் கட்டிட்டேன். அதனால, வீடுகட்ட பணமில்லாம வேலைகள் பாதியில நிக்கிது. கல்லறைக்கு சுத்துச் சுவர் கட்டிப் பூசுறதுக்கும் பணம் இல்லை. ஆனாலும், இறந்ததும் நான் குடியிருக்கப் போற கல்லறை வீட்டை நல்லபடியா கட்டி முடிச்சிட்டதால இப்ப வசிக்கிற வீட்டை கட்டி முடிக்கலையேன்ற வருத்தம் எனக்கு இல்லை.

அனுபவிச்சவங்களுக்கே வலி தெரியும்

கண்ண மூடுறதுக்குள்ள இந்தக் கல்லறையை எப்படியெல்லாம் மெருகேத்தலாம்னுதான் இப்ப யோசிச்சிட்டு இருக்கேன். இயல்பாவே எனக்கு தேசப்பற்று கொஞ்சம் ஜாஸ்தி. அதனாலதான் வீட்லயும் கல்லறையிலும் தேசியக் கொடியை வெச்சுருக்கேன்” என்றவர், “கல்லறையைச் சுத்தி பூந்தொட்டி வைக்கப் போறேன். இதோ பாருங்க அந்தத் தொட்டிகளையும் நானே என் கையால செஞ்சுட்டு இருக்கேன்” என்று சொல்லி பூந்தொட்டியைக் காட்டினார்.

நாம் அங்கிருந்து புறப்பட எத்தனித்த போது, “தம்பி ஒரு நிமிஷம்..” என நம்மை நிறுத்திய ரோஸி, “என்னை மாதிரி தனிமையில ஒண்டிக் கட்டையா இருக்கவங்கள பார்த்து, ‘நீங்க செத்துப்போனா உங்கள யாரு எடுத்து அடக்கம் பண்ணுவா’ன்னு மட்டும் யாரும் கேட்க வேண்டாம்னு எழுதுங்க தம்பி. ஏன்னா, அந்த வார்த்தைகளோட வலி, அதை அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்