மாரத்தானில் கிடைத்த ரூ. 3.42 கோடியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியின் மூலம் கிடைத்த ரூ.3.42 கோடி நிதி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

73,206 நபர்கள் கலந்து கொண்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (ஆக.6) சென்னை, தீவுத்திடலில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், பரிசுத்தொகையினை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: "2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று காலம் என்பதால், கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிகள் மெய்நிகர் போட்டிகளாக நடத்தப்பட்டன. அந்தச் சூழ்நிலையிலும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்தார்கள். பதிவுக் கட்டணமாக கிடைத்த 23 லட்சம் ரூபாயை அரசிடம் பேரிடர் நிவாரண நிதியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

2021-ஆம் ஆண்டு நடந்த மாரத்தான் போட்டியில், பதிவுக் கட்டணமாக கிடைத்த 56 லட்சம் ரூபாயை கரோனா பேரிடர் நிவாரண நிதியாக என்னிடம் அன்றைக்கு வழங்கினார்.கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் 43 ஆயிரத்து 231 பேர் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள். இது ஆசிய சாதனையாக அமைந்தது. அதற்கான சான்றிதழ்களையும் என்னிடம் வழங்கினார். அந்தப் போட்டிகளில் கிடைத்த 1 கோடியே 22 லட்சம் ரூபாயை அரசிடம் ஒப்படைத்தார். அந்தத் தொகை, ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலமாக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரக்கூடிய மக்கள் தங்குவதற்காக கட்டிடம் கட்ட பயன்படுத்த அந்த நிதி சேர்க்கப்பட்டிருக்கிறது.

நான் குறிப்பிட்டு காட்டியது போல, இந்த ஆண்டு, கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில், 73 ஆயிரத்து 206 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தப் போட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான். இந்த மாரத்தான் போட்டியில் 50 ஆயிரத்து 629 ஆண்களும், 21 ஆயிரத்து 514 பெண்களும் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள். உலகத்திலேயே முதன்முறையாக, திருநங்கைகள், திருநம்பிகள் 1063 பேர் பங்கேற்று ஓடி, ஒரு மிகப் பெரிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

அதைத்தான் நம்முடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, உங்களை எல்லாம் ஊக்குவிக்க அவருடைய சார்பில் திமுக இளைஞரணி சார்பிலே மாரத்தான் போட்டியிலே பங்கெடுத்த ஒவ்வொரு திருநங்கைகள், திருநம்பிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து, அதையும் இன்றைக்கு வழங்கியிருக்கிறார். இந்த மாரத்தானில், அரசு உயர் அதிகாரிகள், அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ், காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல் கடலோர காவல்படை, ராணுவ வீர்கள் 1500 பேர் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள்.

பல்வேறு வெளிநாட்டு தூதர்கள் வருகை தந்திருக்கிறார்கள். எனவே இது சாதாரண மாரத்தான் அல்ல, இது சமூகநீதி மாரத்தானாக அமைந்திருக்கிறது. நாம் எதைச் செய்தாலும், அதிலே ஒரு பெரிய சிறப்பு இருக்கும், பெருமை இருக்கும், பூரிப்பு இருக்கும், மகிழ்ச்சி இருக்கும், எழுச்சி இருக்கும், எல்லாவற்றையும் தாண்டி புதுமையும் இருக்கும், புரட்சியும் இருக்கும், அதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டு மாரத்தான், இதுவரை உலகத்திலே எங்கும் நடைபெறாத வகையில், சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. இந்த ஆண்டுக்கான மாரத்தானில், 3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருக்கிறது. அதையும் என்னிடம் அமைச்சர் வழங்கியிருக்கிறார். அது எதற்கு பயன்பெறப் போகிறது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கட்டடம் ஒன்று கட்டுவதற்கு இந்தத் தொகை பயன்படப் போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக, ஆனபிறகு, விளையாட்டுத் துறை மேலும் பல மடங்கு எழுச்சி பெற்றிருக்கிறது. உலகப் புகழ் பெற்ற போட்டிகள் நடக்கும் மாநிலமாக, ஏற்கெனவே செஸ் போட்டியை நடத்தினோம், இப்போது ஹாக்கி போட்டியை நடத்தி கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பல போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. இது தமிழகத்தில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏராளமான புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இது பயன்படுகிறது. அனைத்திலும் தமிழகம் வளர வேண்டும் என்று மறைந்த முதல்வர் கருணாநிதி எண்ணினார். அந்த எண்ணம் இன்றைக்கு ஈடேறிக்கொண்டு இருக்கிறது" என்று முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE