கடலுர் / விருத்தாசலம்: என்எல்சி 2 -வது சுரங்கத்தை ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையிட்டு நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுடன் 11- வது நாளாக இவர்களின் போராட்டம் தொடர்கிறது.
நெய்வேலியில், என்எல்சி இந்தியா அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்கள். 12 ஆயிரம் பேர் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவர். என்எல்சிக்காக வீடு, நிலம்வழங்கியவர்களில் பெரும்பாலானோர் இந்த சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
நிரந்தர தொழிலாளர்களுக்கும் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே பணி அளவில் ஒரே நிலை இருந்தாலும், ஊதிய விகிதத்தில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இதைக் கண்டித்து அவ்வப்போது ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதும், அதன் பின் நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 26-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பாலக்கரையில் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து என்எல்சி நிறுவனத்துடன் பேசி தீர்வு காண வேண்டும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனுக்கு இத்தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் நேற்று விருத்தாசலத்தில் உள்ள அமைச்சர் வீட்டுக்கு பேச சென்ற போது, அவர் வீட்டில் இல்லாதது தெரிய வந்தது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் விருத்தாசலம் பாலக்கரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள், தங்கள் போராட்டத்தை நெய்வேலி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா திடலுக்கு மாற்றினர்.
நேற்று முன்தினம் என்எல்சி 1-வது சுரங்கம் வாசல் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று என்எல்சி 2-வது சுரங்கம் வாசல் முன்பு முற்றுகையிட்டு, தங்களது 11 -வது நாள் போராட்டத்தை தொடர்ந்தனர். ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்தையொட்டி, அப்பகுதி யில் போலீஸாருடன் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், சுரங்க வாசல் வழியாக பணிக்குச் சென்ற நிரந்தர தொழிலாளர்களையும், சொசைட்டி தொழிலாளர்களையும் கைகூப்பி வணங்கி தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். தங்கள் போராட்டத்தை தொடர இருப்பதாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 11 நாட்களாக பணிக்குச் செல்லாமல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago