வருமான வரி அலுவலர்களை திமுகவினர் தாக்கிய வழக்கு ஆக.7-க்கு ஒத்திவைப்பு

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: வருமான வரித்துறை அலுவலர்கள் தாக்கிய வழக்கில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுகவினர் 15 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. தீர்ப்பை ஆக. 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கரூர் செங்குந்தபுரம் குறுக்குத்தெருவில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த மே 26ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்ட திமுகவினர் அதிகாரிகளை தடுத்து தாக்கி, அவர்களது கார் கண்ணாடியை உடைத்து, ஆவணங்களை பறித்தனர்.

இவ்வழக்கில் கரூர் மாநகராட்சி உறுப்பினர்கள் பூபதி, லாரன்ஸ் உள்ளிட்ட திமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் 1, 2 ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

இவ்வழக்கில் கடந்த ஜூலை 28ம் தேதி மதுரை கிளை 15 பேரின் ஜாமீனை ரத்து செய்து சம்பந்தப்பட்ட 15 பேரும் 3 நாட்களுக்குள் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது. இதையடுத்து 15 பேரும் அவர்கள் ஜாமீன் பெற்ற நீதிமன்றங்களில் கடந்த ஜூலை 31ம் தேதி சரணடைந்தனர்.

கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ராஜலிங்கம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. திமுக மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாதங்கள் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.ராஜலிங்கம் தீர்ப்பை ஆக. 1ம் தேதி ஒத்திவைத்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த 15 திமுகவினரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் நீதிபதி சி.ராஜலிங்கம் ஆக. 1ம் தேதி அளித்த தீர்ப்பில், திமுவினர் 15 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து கரூர் கிளை சிறையில் உள்ள திமுகவினர் 15 பேரும் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை இன்று (ஆக. 5ம் தேதி) நடைபெற்றது. திமுகவினர் சார்பில் வழக்கறிஞர் மணிராஜும், வருமான வரித்துறையினர் சார்பில் சென்னையை சேர்ந்த 2 பெண் வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பு வாதங்களை கேட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முசசுந்தரம் இவ்வழக்கின் தீர்ப்பை ஆக. 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE