கோவை தம்பதியின் 3 வயது குழந்தைக்கு ‘சாதி, மதம் இல்லை’ என சான்று 

By க.சக்திவேல்

கோவை: கோவையில் தங்கள் குழந்தைக்கு சாதி, மதம் இல்லை என ஒரு தம்பதியினர் வருவாய்த் துறையிடமிருந்து சான்று பெற்றுள்ளனர்.

கோவை பீளமேடு காந்திமாநகரைச் சேர்ந்தவர்கள் பீனா பிரீத்தி - பிரலோப் தம்பதியினர். இவர்களது மகள் பி.பீ.ஹாதியா (3). ஹாதியாவுக்கு சாதி, மதம் இல்லையென சான்று பெற விரும்பிய தம்பதியர், கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இன்று (ஆக.8) சான்று பெற்றுள்ளனர். இது தொடர்பாக பீனா பிரீத்தி கூறியதாவது: “எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை மட்டும் இருந்தால் போதும். எங்கள் மகளை சாதி, மதம் என எதை வைத்தும் பிரிக்க வேண்டாம் என முடிவு செய்தோம். இவ்வாறு சான்று பெறுவதால் வருங்காலத்தில் சாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எதையும் எங்கள் குழந்தை பெற இயலாது என்று தெரிந்துதான் விண்ணப்பித்தோம்.

சான்று பெற விண்ணப்பித்து பெறுவதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. ஏன் இதை வாங்குகிறீர்கள் என நிறைய கேள்விகள் கேட்டனர். அதிகாரிகளுக்கு இவ்வாறு சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இவ்வாறு வாங்க நினைத்தும் எப்படி பெறுவது என்றுகூட சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், ஏற்கெனவே கடந்த 2013 ஜூன் 6-ம் தேதி தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ள கடிதத்தில், “மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவனின் பள்ளிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதியில்லை, மதமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ விரும்பினால், சம்பந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE