“மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன” - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: “மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. இதில் சர்ச்சையை ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டு அரசியல் செய்கிறார்கள்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “ஆதிச்சநல்லூர் உட்பட நாட்டிலுள்ள 5 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு ரூ.2500 கோடி ஒதுக்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க பிரதமர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அவர் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அந்தந்த நாடுகளை சேர்ந்த தலைவர்களிடம் இதுகுறித்து பேசி வருகிறார்.

மணிப்பூர் விவகாரத்தில் அனைவருக்கும் பொதுவான தீர்வை எட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து பேசியிருக்கிறோம். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்திருக்கிறோம். ஆனால், அதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.

மணிப்பூரில் நடக்கும் சம்பவங்கள் இது முதல்முறையல்ல. இதற்குமுன் பலமுறை நடைபெற்றுள்ளது. அரசியல் பேசுவதாக நினைக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் அரசியல் செய்வதால் இதை நான் சொல்ல வேண்டியுள்ளது. மணிப்பூரில் 2013-ம் ஆண்டில் ஓராண்டுக்கு மேல் கலவரம் நடைபெற்றது. அம்மாநிலம் முடக்கப்பட்டிருந்தது. கிராமங்களுக்கு மருந்து பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டு செல்லமுடியவில்லை. அந்த மாதிரி நிலையில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அங்கு செல்லவில்லை. ஆனால், இப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் 3 நாட்கள் முகாமிட்டு தங்கியிருந்து அங்குள்ள நிலைமைகளை பார்த்து, மக்களை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார்.

அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமர்தான் வரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கு சென்று பார்த்து வந்துள்ளனர். அவர்கள் அங்கே என்ன பார்த்தனர் என்றுகூட சொல்லத் தயாராக இல்லை. விவாதத்துக்கு வரமாட்டோம், ஆனால் கண்டிஷன் போடுவோம் என்றால் என்ன நியாயம்.

மணிப்பூர் சர்ச்சை குறித்து பேசுவதற்கு உரிய இடம் நாடாளுமன்றம். ஆனால், அங்கு நாங்கள் பேசமாட்டோம், எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு பேசுவோம் என்று எதிர்க்கட்சிகள் பேசிவருகின்றன. நாடாளுமன்றத்தில் யார் பதில் அளிக்க வேண்டும், எப்போது அளிக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. ஆனால் அப்படி எந்த விதிமுறைகளும் இல்லை. நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. ஒரு விளையாட்டு எடுத்துக்கொண்டால் இருதரப்பும் அவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்க் கட்சியினர் நினைக்கிறார்கள். நடுவராகவும் நாங்கள்தான் இருப்போம், எப்போது விளையாட வேண்டும் என்றும் நாங்கள்தான் கூறுவோம் என்று எதிர்க் கட்சிகள் கூறுகின்றன” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், இந்தியாவிலேயே முதல் முதலாக அமைக்கப்பட்ட சைட் மியூசியத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020-2021-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டில் அகழாய்வு பணி தொடங்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் ஏராளமான பழங்கால தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழிகளை திறந்து அவற்றில் உள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டியதுடன், இந்தியாவிலேயே முதன் முறையாக இங்கு அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தையும் அவர் திறந்து வைத்தார். ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்ற 'பி' மற்றும் 'சி' சைட் பகுதியில் அகழாய்வு குழிகளுக்கு மேல் கண்ணாடி தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி மக்கள் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: “நாட்டிலுள்ள மிகப் பழமையான பகுதிகளின் தொன்மையையும், சிறப்பையும் அகழாய்வுகள் மூலம் வெளியே கொண்டுவந்து கொண்டிருக்கிறோம். இப்பகுதியில் வெவ்வேறு காலகட்டங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர். ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சாமானியர்கள், வசதிபடைத்தவர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் இருந்துள்ளனர். அவர்களின் உடல்களை தாழிகளில் வைத்து புதைக்கும்போது உடை, நகைகள், நெல், தினை உள்ளிட்ட தானியங்களையும் வைத்துள்ளனர். இப்போதிலிருந்து 3500 ஆண்டுகள் பழமையான பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன.

இதுபோல் நாட்டிலுள்ள மிகபழமையான நாகரிகங்கள் இருந்த 5 இடங்களில் அகழாய்வு செய்து அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தோம். அதன்படி இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இங்கிருந்து பெர்லின், நெதர்லாந்து போன்ற பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்களை மீண்டும் இங்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு காட்சிப்படுத்தப்படும் தொல்லியல் பொருட்கள் குறித்த விவரங்களை தங்கள் மொபைல் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏதுவாக கியூஆர்கோடு வசதியை ஏற்படுத்த தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும் இப்பகுதியில் திறந்தவெளி டிஜிட்டல் திரை அமைத்து இப்பகுதி பழங்கால சமுதாயத்தின் தொன்மையையும் சிறப்பையும் விளக்கும் ஒலி, ஒளி காட்சிகளை திரையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மொழி, கலாச்சாரத்தின்மீது பிரதமருக்கு தனி அக்கறை உள்ளது. அவரது வழிகாட்டுதலின்படி அருங்காட்சியகங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்கிறோம். பாரதத்தின் கலாசாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. சுதேஷ் தர்ஷன் திட்டம் என்ற பெயரில் 15 சுற்றுலா சர்கியூட் தயார்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டிலுள்ள பாரம்பரிய மற்றும் தொல்லியல் தளங்களை பாதுகாக்கும் வகையில் 77 திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட நாட்டிலுள்ள 12 பாரம்பரியமிக்க நகர மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நமது நாட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்டு பல்வேறு நாடுகளில் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை திரும்ப கொண்டுவர மத்திய தொல்லியல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொல்லியல் தளங்களை தனியார்துறையினர் தத்தெடுத்து மேம்படுத்தும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளோம்..

புதுடெல்லியில் 1.17 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் ஒவ்வொரு மாநிலத்தின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கை விளக்கும் வகையில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. 3.3 லட்சம் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட விவரங்களை மின்னணு முறையில் பதிவேற்றம் செய்து 3 கோடி பக்கங்களாக உருவாக்கியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

விழாவில் கனிமொழி எம்.பி. பேசும்போது, “ஒவ்வொரு அகழாய்வுகளும் மிக சுவாரஸ்யமான விஷயங்களை நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள், இப்பகுதி மக்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்பட்டு, ஊர்கூடி தேர் இழுத்து இப்போது ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்