சென்னை: “நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் பாஜக எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து இருக்கிறது. அதனால் கோபம் அதிகமாகும். திமுகவை நோக்கிப் பாய்வார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாநிலமெங்கும் கொண்டாடுவது தொடர்பாக, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காகத்தான் இந்தக் கூட்டம் காணொலி மூலமாக கூட்டப்பட்டிருக்கிறது. திமுக சார்பில் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகளின் விவரங்களை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உங்களிடம் விளக்கினார். மாவட்டச் செயலாளர்களும், அணிகளின் செயலாளர்களும் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, அவருக்குப் புகழ் சேர்க்கும் விழாவாக, பெருமை சேர்க்கின்ற விழாவாக கொண்டாட வேண்டும். அதைவிட முக்கியமாக அவரின் கொள்கைகளை பரப்புகிற விழாவாக கொண்டாட வேண்டும். மக்கள் பயன்பெறும் விழாவாக கொண்டாட வேண்டும். இதுபோன்ற விழாக்களின் மூலமாகதான் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகம் பிறக்கிறது. நமக்கு நாமே உணர்ச்சியை பெறுகிறோம். இவை வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், கொள்கைத் திருவிழாக்களாக இருக்கிறது!
கட்சியின் நிகழ்ச்சிகள் மூலம் ஆண்டுதோறும் நம்மை தலைவர் கருணாநிதி எப்படி உணர்ச்சி கொள்ள வைத்தாரோ, அதுபோல தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையும் ஆண்டு முழுவதும் நடத்தி கழகத்தை எழுச்சி பெற வைக்க வேண்டும். அரசு சார்பிலும் விழாக்கள் நடத்தப் போகிறோம். அரசு சார்பில் நடத்துகிற நிகழ்ச்சிகளுக்கான பரிந்துரைகள் வந்திருக்கிறது. மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். கட்சியின் சார்பில், நாம் எழுச்சியோடு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதற்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தேவையான உதவிகளை செய்து, எல்லா மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
» என்எல்சிக்கு மீண்டும் நிலங்கள் எடுத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்: அன்புமணி எச்சரிக்கை
» அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ விமர்சனம்
ஒன்றிய – நகர – பேரூர் - பகுதி அளவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளிடம் ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி பற்றி பேசுங்கள். கட்சி நிர்வாகிகள் உற்சாகத்தோடு பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலாளர்களான உங்களுக்குத்தான் இருக்கிறது.
தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா என்று சொல்கிறோம் என்றால், அதுவும் தேர்தல் பரப்புரையில் ஓர் அங்கம்தான். தலைவர் கருணாநிதி பெயரைச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை நம்மை நோக்கி ஈர்த்தாக வேண்டும். மக்களை ஈர்க்க கருணாநிதி காந்தம்போல் நமக்கு உதவுவார். அவரால் பயன்பெறாத தரப்பினரே இல்லை. அதனால், அந்த அடிப்படையில் கொள்கை விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராகிவிட்டோம். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40-க்கு 40 இடங்களையும் தி.மு.க தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் வகையில் நம்முடைய பரப்புரையை தொடங்கியிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிதோறும் களப்பணியாற்றும் வகையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்களின் தீவிரமான களப்பணிதான் கட்சியின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். கட்சியின் வியூகத்தை வெற்றியடையச் செய்வது உங்கள் ஒவ்வொருவரின் கடமை. எனவே, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் நியமனம் மற்றும் அவர்கள் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மண்டலமாக பயிற்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி ஒவ்வொரு மண்டலமாக பயிற்சி பாசறைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக, டெல்டா மாவட்டங்களுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தை திருச்சியில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். அது, அந்த மாவட்டச் செயல்வீரர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரையுமே உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது. வரும் 17-ம் தேதி தென் மண்டல மாவட்டங்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கிறது. தென் மாவட்டங்களின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கூட்டங்களை நடத்தி அவர்களை அழைத்து வருவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
இன்னொன்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பாசறைக் கூட்டங்களை நடத்துவதோடு நம்முடைய வேலை முடிந்துவிடாது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையின் தொடக்கம் மட்டும்தான் அது. அதனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணிகளையும் தொடங்க வேண்டும். கட்சியின் சாதனைகள் மற்றும் திமுக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான கருவியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும். ஒவ்வொரு நூறு வாக்காளருக்கும் ஒரு பொறுப்பாளர் என்று வாக்குச்சாவடி குழு உறுப்பினர் (BLC) நியமனம் செய்கிற பணிகளும் எல்லா மாவட்டங்களிலும் நிறைவடைந்திருக்கிறது.
வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை போலவே, எல்லா வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களையும் தலைமைக் கழகத்திலிருந்து அழைத்து சரிபார்க்கிற பணியை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறேன். சரிபார்ப்புக்குப் பின், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களில் (BLC) ஏதாவது மாற்றங்கள் இருந்தால் அதையும் செய்து முடித்து, எல்லா வாக்குச்சாவடிகளிலும் BLA2, BLC பணிகளை முழுமையாக முடித்து அவங்களுக்கான அடுத்தடுத்த பணிகளை தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி குழுவிலும் தங்களுக்குரிய முரண்பாடுகள் எதுவும் இல்லாமல், ஒற்றுமையாக வேலை செய்கிற வகையில் எல்லா செயல்பாடுகளும் இருக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் பாசறைக் கூட்டம் முடிந்துவிட்டதால், அந்த மாவட்டங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக நூறு வாக்காளர்களைப் பிரிக்கிற பணி, வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை சரிபார்க்கும் வேலையை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாஜகவை பொறுத்தவரையில் இது அவர்களுக்கு வாழ்வா, சாவா என்ற தேர்தல். மீண்டும் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழகத்தில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து இருக்கிறது. அதனால் கோபம் அதிகமாகும். நம்மை நோக்கிப் பாய்வார்கள். கடந்த காலங்களில், இதுமாதிரி பல தடைகளை சமாளித்துத்தான் நம்முடைய கழகம் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த முறையும் நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago