நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் மேலும் 20 பேர் இடையீட்டு மனு தாக்கல்

By கி.மகாராஜன் 


மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து மேலும் 20 பேர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

விருதுநகர் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பாலசுப்பிரமணியன், பழனிச்சாமி, அசோக்மேத்தா பஞ்சய், சார்லஸ், தியாகராஜன், கமலக்கண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். முன்ஜாமீன் மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் ரூ.10 கோடி வைப்பு நிதி செலுத்த தயாராக இருப்பதாகவும், கைது செய்ய தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தரப்பில், 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மனுதாரர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை புகார் அளிக்கக்கூடாது என மிரட்டி வருகின்றனர். பல்வேறு பெயர்களில் 138 கம்பெனிகள் நடத்தி பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர். எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நியோ-மேக்ஸ் மோசடி வழக்கின் தற்போதைய நிலை குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில், எங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என ஏராளமானோர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் தான் புகார்கள் வந்துள்ளன. புகார் கொடுக்காமல் இடையீட்டு மனு தாக்கல் செய்வது ஏற்படையது அல்ல. இதற்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. பின்னர் விசாரணையை ஆக.10-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE