“மக்களின் குரலாக மக்களவையில் ராகுல் காந்தியின் குரல் மீண்டும் ஒலிக்கப் போகிறது” - கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

சென்னை: மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு மிகப் பெரிய அடியாக அமைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றும் போது, அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டி பேசிய 20 நாட்களில் சூரத் நீதிமன்றத்தில் ஏற்கனவே நடைபெற்ற அவமதிப்பு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டு பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்றைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் ராகுல் காந்தியின் பதவி பறிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மக்களவை உறுப்பினராக மீண்டும் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை அரசமைப்புச் சட்டத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கையுள்ள அனைவரும் பெருத்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். உச்ச நீதிமன்றம் நீதி வழங்கியதன் மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. மோடி ஆட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு பாசிச, சர்வாதிகார ஆட்சிக்கு இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய அடியாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மக்களின் குரலாக மக்களவையில் ராகுல் காந்தியின் குரல் மீண்டும் ஒலிக்கப் போகிறது. இது இந்தியாவின் நீதி பரிபாலனத்துக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE