நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | காஞ்சிபுர மாவட்ட முன்னாள் வருவாய் அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காஞ்சிபுர மாவட்ட முன்னாள் வருவாய் அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் இரு வழக்குகளை பதிவு செய்து, 15 பேரை கைது செய்துள்ளனர். புலன் விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, சிறப்பு தாசில்தார், திட்ட இயக்குனர் ஆகியோருக்கு எதிராக ஆர்.ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இழப்பீட்டுத் தொகையை பட்டுவாடா செய்த மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா மன்னிப்பு கோரியதுடன், தவறாக பட்டுவாடா செய்யப்பட்ட இழப்பீட்டு தொகையில் 18 கோடி ரூபாய் திரும்ப வசூலிக்கப்பட்டு உள்ளது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

இந்த நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுத்த நீதிபதி, டிஆர்ஓ, நர்மதாவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்ற அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

மேலும் அவரது உத்தரவில், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளை தண்டிக்காமல் விட்டுவிட்டால் நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள். எனவே, அதுபோன்ற அதிகாரிகளுக்கு வலுவான செய்தியை கூறும் வகையில் இந்த சிறை தண்டனையை விதித்துள்ளதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE