தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியை தடுக்க முயற்சி: நிர்மலா சீதாராமன் உடன் தமிழக தென்னை விவசாயிகள் சந்திப்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தென்னை விவசாயிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்தச் சந்திப்பு, தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் முயற்சியாக இருந்தது.

தேங்காய், கொப்பரை, தென்னை நார் பொருட்களின் கடும் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலையில் உள்ளது. இதை காக்கும் பொருட்டு தமிழக தென்னை விவசாயிகள் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை, முன்னாள் மக்களவை துணை சபாநாயகரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.தம்பிதுரை மற்றும் முன்னாள் அமைச்சர், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் ஆகியோர் அமைச்சரை நேரில் சந்தித்து அளித்தனர்.

தமிழக தென்னை விவசாயிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: 'தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.108.60-இல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 50 நாட்களுக்கு ஒரு முறை கொப்பரை தேங்காயை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக வெளிமார்க்கெட்டில் விலை உயரும் வரை கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளின் வாழ்வாதரத்தை காக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெயை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கரோனா பரவல், மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக அளவில் பணமதிப்பு மற்றும் பொருளாதார நிலையின்மை ஏற்பட்டுளது. இதன் காரணமாக, மூலப் பொருட்களின் விலை அதிகமாகவும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விலை குறைவாகவும் உள்ளது, இதனால், இத்தொழிலை நம்பி வந்துள்ள படித்த பட்டதாரி இளைஞர்கள் தம் கயிறு நிறுவனங்களை மூடும் நிலைக்கும், ஏலம் விடும் நிலைக்கும் வந்துள்ளன.

இதனால், வங்கிகளுக்கு தங்கள் கடன் தவணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கிகளின் என்பிஏ வகை கடன் தவணைகளை 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்தி கொடுக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியை கொண்ட குழுவை அமைத்து தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதி தொழிலை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தி, அன்னிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், செயலாளர் செல்லத்துரை, நிர்வாகிகள் பத்மநாபன், சண்முகசுந்தரம், காந்தி, நாகராஜன், தாஜுதின், முகமது நூருல்லா உள்ளிட்ட தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE