சென்னை: தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.4 ) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், தமிழகம், குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், தென்மேற்கு பருவமழையின் போது மிகக் குறைவான மழைப்பொழிவைப் பெறுகின்றன. குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை, குறிப்பாக கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளது. மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த உத்தரவை கர்நாடகம் முழுமையாக மதிக்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை.
2023-2024 ஆம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ள போதிலும், கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவுக்கு பற்றாக்குறையாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில், 2023, ஆகஸ்ட் 2 ஆம் நாளன்று நிலவரப்படி, 26.6 டி.எம்.சி. அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இது குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். குறுவை நெற்பயிர் முதிர்ச்சியடைந்து, அதிக மகசூல் பெற, இன்னும், 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.
» இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர்: தமிழகத்தின் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இத்தகைய ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரிடம் கடந்த ஜூலை 5 மற்றும் 19 தேதிகளில் இப்பிரச்சினையை எடுத்துச் சென்று, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த விநியோக அட்டவணையைக் கடைப்பிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறும், இதனை முறையாக கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தினை அறிவுறுத்துமாறும் வலியுறுத்தினேன்.
இருப்பினும், கர்நாடக அரசு இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரைத் திறந்து விட்டதாகவும், கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 விழுக்காடு அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும், அவற்றிற்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்கிறது. ஏற்கெனவே அரிசித் தட்டுப்பாட்டால், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள தற்போதைய சூழலில், காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டும்.
அதோடு, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளபடி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு பிரதமர் உரிய அறிவுரைகளை வழங்குவதோடு, இதனை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுரைகளை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்கிட வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago