அண்ணாமலையின் நடைபயணத்துக்கு மக்கள் அமோக ஆதரவு: அமர்பிரசாத் ரெட்டி சிறப்புப் பேட்டி

By துரை விஜயராஜ்

ஊழலுக்கு எதிராகவும், மக்களுக்காக மத்திய பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ள நலத் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறும் வகையிலும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 110 நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

ராமேசுவரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கி வைக்க, மறுநாள் தனது பயணத்தை அண்ணாமலை தொடங்கினார். இந்த நடைபயண திட்டத்தின் இணை பொறுப்பாளராக அமர்பிரசாத் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013-ல் பாஜகவில் இணைந்த அமர்பிரசாத், மத்திய சுகாதாரத் துறையில் ஆலோசகராக இருந்து வந்தார். அண்ணாமலை, மாநிலத் தலைவர் ஆன பிறகு, தனது பணியை ராஜினாமா செய்தவர், அது முதல் அண்ணாமலையின் வலதுகரமாக செயல்பட்டு வருகிறார். பாஜக விளையாட்டு, திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவராகவும் உள்ளார்.

அண்ணாமலை நடைபயணத்தின்போது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அமர்பிரசாத் ரெட்டி அளித்த சிறப்பு நேர்காணல்:

அண்ணாமலையின் நடைபயணத்துக்கு மக்களின் ஆதரவும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் எப்படி இருக்கிறது?

மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. தமிழக பாஜக சார்பில் ரத யாத்திரை பலமுறை நடத்தப்பட்டுள்ளது. நடைபயணம் இதுதான் முதல்முறை. முதல் 5 நாட்களிலேயே எங்களுக்கு நிறையஅனுபவம் கிடைத்திருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை நியமித்திருந்தாலும், அண்ணாமலை என்ற ஒருவருக்காக கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறோம். சிறியவர்கள் முதல் முதியோர் வரை அண்ணாமலையை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கு செல்லும்போதும், அவரைபார்க்க கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர். இளைஞர்கள் அவரை தங்கள் முன்மாதிரியாக கருதுவதை காணமுடிகிறது. அதிமுக, தமாகா உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றன.

தன்னை முன்னிலைப்படுத்தவே இந்த நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொள்வதாக விமர்சனம் எழுகிறதே?

அண்ணாமலை, தன்னை பற்றி எங்கேயும் விளம்பரப்படுத்திக் கொண்டது கிடையாது. முற்றிலும்கட்சிவளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார். 234 தொகுதிகளிலும்அவர் நடைபயணம் மேற் கொள்வது, பாஜகவைவலுப்படுத்துவதற்குதான். மேலும், மக்களைசந்திக்கும்போது, அவர்களது பகுதியில் உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார். மாநில பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறார்.

ராமேசுவரத்தில் தொடங்கியது ஏன்?

இது ஆன்மிக தலம். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த ஊர். சுவாமி விவேகானந்தர் தமிழகத்தில் முதன்முதலாக வந்து இறங்கிய இடம். இப்படி பல சிறப்புகளை கொண்டுள்ளதால் ராமேசுவரத்தை தேர்தெடுத்தோம். ராமேசுவரத்தில் பிரதமர் மோடி போட்டியிடப் போவதாக செய்திகள் வலம் வருகின்றன. வாரணாசிக்கும், ராமேசுவரத்துக்கும் ஆன்மிக தொடர்பு இருப்பதால், அதுபோல கூறுகின்றனர். அவ்வாறு மோடி இங்கு போட்டியிட்டால் பாஜகவினருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

அண்ணாமலையின் நடைபயணத்தால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படுமா?

அரசியலுக்கு வரும் அனைவரும் பணம் சம்பாதிக்கின்றனர். 40 ஆண்டுகாலமாக திமுகவும் அதைத்தான் செய்கிறது. தமிழகம் இழந்த 40 ஆண்டுகாலத்தை மீட்டு, அண்ணாமலையின் வழிகாட்டுதல்படி, காமராஜர் தந்த ஆட்சியை இந்த நடைபயணம் மூலம் மீண்டும் பாஜக கொடுக்கும். அதை நோக்கி தமிழக பாஜக பயணித்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலை தினமும் சுமார் 10 முதல் 11 கி.மீ. தூரம் நடக்கிறார். குறைந்தபட்சம் 30,000 பேரை சந்தித்து பேசுகிறார். தமிழக மக்களின் நலன் மற்றும் கட்சியின் வளர்ச்சி மட்டுமே இப்பயணத்தின் நோக்கம். தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கிறது. குறிப்பாக, ராமநாதபுரம், சிவகங்கையில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நடைபயணம் தொடர்பான எதிர்மறை விமர்சனங்களை பாஜக எப்படி எதிர்கொள்கிறது?

நடைபயண பொறுப்புகளை கவனித்து வரும் என் மீது அநாகரிகமான விமர்சனங்களை திமுகவினர் முன்வைக்கின்றனர். திமுகவினர் செய்யும் தரமற்ற அரசியலை பாஜக ஒருபோதும் செய்யாது. நடைபயணம் குறித்து தற்போது, ‘ஆழ்ந்த இரங்கல்’ என்று சமூக வலைதளங்களில் திமுகவினர் பதிவிட்டு வருகின்றனர். எந்த கொள்கைக்காக திமுக என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த கொள்கை இறந்துவிட்டது. எனவே, ‘ஆழ்ந்த இரங்கல்’ என்பது திமுகவுக்குதான் பொருந்தும். எனினும், விமர்சனங்களை கண்டு நாங்கள் அஞ்சுவது இல்லை. அதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்