கோவையின் பெயர் சொல்லும் பகுதிகளில் முக்கியமானது உக்கடம் பேருந்து நிலையம். இதை ஒட்டியே செல்லும் குறுக்குச் சாலையில் நடந்தால் நம் கண்ணில் படுவது பழைய புத்தகக் கடைகள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வாசகர்கள் மட்டுமல்லாது ராஜேஷ்குமார், சுஜாதா உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் தேனீக்களாய் தேடி வந்து இங்கே பழைய புத்தகங்களை வாங்கிச்செல்வர். ஆனால், இப்போது இந்த அங்காடிகள் மவுசு குறைந்து கிடக்கின்றன.
பதிப்பிட்ட பதிப்பகங்களில்கூட கிடைக்காத பிரதாப முதலியார் சரித்திரம் தொடங்கி, புதுமைப்பித்தன், கல்கி, அகிலன், ஜெயகாந்தன் உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்கள் வரைக்கும் இங்குள்ள அங்காடிகளில் பாதி விலையில் கிடைக்கும். நாம் தேடிப்போகும் புத்தகம் இல்லாத பட்சத்தில் சொல்லி வைத்துவிட்டு வந்தால் போதும். அது எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் ஓரிரு நாட்களில் வாங்கிக் கொண்டு வந்து நமக்குக் கொடுத்துவிடுவார்கள்.
தொலைபேசி வசதிகள் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில்கூட அவ்வளவு பரபரப்பாக இயங்கின இந்த பழைய புத்தகக்கடைகள். ஆனால் இன்றோ, மாநகராட்சிக்கு கடை வாடகை செலுத்தக்கூட வசதியில்லாமல் தவிப்பதாகச் சொல்கின்றனர் இங்குள்ள அங்காடி உரிமையாளர்கள். ஆன்லைன் வர்த்தகம், அலைபேசி, இணையதளம் உள்ளிட்ட நவீன வசதிகள் பெருகிவிட்டதே பழைய புத்தக அங்காடிகள் படுத்துப் போனதுக்கு முக்கியக் காரணம் என்கின்றனர் இவர்கள்.
“கடந்த இருபது வருசத்துக்கும் மேலாக இங்க புத்தகக் கடை வெச்சிருக்கோம். ஆனா, ஆரம்பத்துல இருந்த நிலை வேற, இப்ப இருக்கிற நிலைமை வேற. அப்பெல்லாம் வி.ஐ.பி-க்கள்கூட எங்க கடைக்கு புத்தகம் வாங்க வருவாங்க. இயக்குநர் மணிவண்ணன், பிரபல எழுத்தாளர்கள் சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் முன்னாள் உள்துறை செயலாளர் நரேஷ்குப்தா என பலரும் இங்க வந்து புத்தகம் வாங்கிருக்காங்க. அந்தளவுக்கு பழைய புத்தகங்கள் மீதான தேடல் அப்ப இருந்துச்சு. ஆனா இப்ப, எல்லாமே போயே போச்சு” என்று நொந்து கொள்கிறார் இங்கே புத்தகக் கடை விரித்திருக்கும் வியாபாரிகளில் ஒருவரான டி.ஐ.லுத்தூப் ரஹிமான்.
ஆன்லைன் வர்த்தகத்தால்..
அவரைத் தொடர்ந்து பேசிய முபாரக் என்பவர், “இங்கே மாநகராட்சி கட்டிடத்தில் மட்டுமே 31 பழைய புத்தகக் கடைகள் இருக்கு. இதில்லாம, சுற்றுப் பகுதியில தள்ளு வண்டிகளில், தனியார் அறைகளில் என மேலும் 85 புத்தகக் கடைகள் இருக்கு. கால ஓட்டத்துல பொதுவான புத்தகங்களை வாங்க வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சாலும் பள்ளி - கல்லூரி புத்தகங்களை வாங்க வர்றவங்களோட எண்ணிக்கை கணிசமா இருந்துச்சு. பழைய பாடப் புத்தகங்களை மாணவர்களிடம் 60 சதவீதம் தள்ளுபடியில வாங்கி அதிலிருந்து கூடுதலா பத்திலிருந்து இருபது சதவீதம் விலை வெச்சு மத்தவங்களுக்கு விற்போம்.
அதேபோல், பதிப்பகங்களிடம் புதிய புத்தகங்களை நாற்பதிலிருந்து ஐம்பது சதவீதம் தள்ளுபடிக்கு பேரம் பேசி கேட்டு வாங்கி அதிலிருந்து கூடுதலா இருபது முப்பது சதவீதம் விலை வெச்சு விற்போம். இதெல்லாமே பழைய கதைதான். இப்ப நாலஞ்சு வருஷமா ஆன்லைன் வர்த்தகம் தலைதூக்கி எங்க பொழப்ப நசுக்கியிருச்சு. ஆன்லைன் வர்த்தகத்தில், சம்பந்தப்பட்ட கம்பெனிகளே தள்ளுபடி விலைக்கு பதிப் பகங்களிடம் புத்தகங்களை வாங்கி கஸ்டமர்களுக்கு அனுப்பிடறாங்க. அதனால, பெருசா எங்களத் தேடி யாரும் வர்றதில்லை.” என்று சொன்னார்.
kovai_books_1.jpg முபாரக் right
பழையபடி தள்ளு வண்டிக்கு..
தொடர்ந்தும் பேசிய முபாரக், “முன்ன, கேரளத்து மாணவர்கள் நிறையப் பேர் இங்க தங்கியிருந்து படிச்சதால அவங்களால ஓரளவுக்கு வர்த்தகம் இருந்துச்சு. ஆனா இப்ப, கேரளத்துலயும் நிறைய கல்லூரிகளை திறந்துட்டதால அந்த மாணவர்களின் வருகையும் குறைஞ்சு போச்சு. இதுபோன்ற காரணங்களால, முன்பு ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த கடைகள்ல இப்ப ரெண்டாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறதே குதிரைக் கொம்பா இருக்கு.
செமஸ்டர் சமயத்துல மூன்று வாரங்களுக்கு மட்டும் ஏதோ கொஞ்சம் வியாபாரம் நடக்கும். அதுக்கப்புறம் பல நாட்களில் போணி ஆகிறதே பெரிய விஷயமா இருக்கும். இதுக்கிடையில, கடைகளுக்கான வாடகையையும் 900 ரூபாயிலிருந்து நாலாயிரம் ரூபாயா உயர்த்திருச்சு மாநகராட்சி. கடந்த நாலு வருசமா அந்த வாடகையையும் கட்ட முடியாத கஷ்டத்துல நாங்க இருக்கோம். போற போக்கைப் பார்த்தா, இந்தக் கடைகளை எல்லாம் இழுத்து மூடிட்டு பழையபடி தள்ளு வண்டியில புத்தகம் விற்கிற நிலைமை வந்துரும் போலிருக்கு” என்று சொன்னார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago