மரபணு மாற்றக் கடுகு பயிரிடுவதற்கான அனுமதியை திரும்பப் பெறுக: பிரதமர் மோடிக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மரபணு மாற்றக் கடுகு பயிரிடுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தல் எழுந்துள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு விழுப்புரம் தொகுதி எம்.பி டி.ரவிக்குமார் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு இன்று அனுப்பப்பட்ட தனது கடிதத்தில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் குறிப்பிட்டிருப்பதாவது: ''களைக்கொல்லி - சகிப்புத்தன்மை கொண்ட மரபணு மாற்றக் கடுகு குளுஃபோசினேட் என்ற களைக்கொல்லியின் பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கும். இதன் விளைவாக மண் மற்றும் நீர் மாசு உயரும், இது பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. உச்ச நீதிமன்றம் நியமித்த தொழில்நுட்ப நிபுணர் குழுவின் உறுப்பினர்களான 5 விஞ்ஞானிகளும் இந்தியாவில் மரபணு மாற்றப் பயிர்களுக்கு தடை விதிக்கவேண்டும் என ஒருமனதாகப் பரிந்துரைத்துள்ளனர்.

நாடாளுமன்ற நிலைக்குழுக்களும் இதே போன்ற பரிந்துரைகளை வழங்கியுள்ளன. மேலும், விவசாயம் என்பது மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள ஒரு விஷயமாகும். ஒன்றிய அரசு இந்த அனுமதியை அளித்ததன்மூலம் அரசியலமைப்பு அதிகாரத்தை வெளிப்படையாகப் புறக்கணிப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியலின் (நுழைவு 14) கீழ் விவசாயம் பட்டியலிடப்பட்டுள்ளது. மரபணு மாற்றப் பயிர் சாகுபடி போன்ற முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதில் மாநில அரசுக்குள்ள அரசியலமைப்பு அதிகாரத்தைப் புறக்கணிப்பது நமது ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கும் கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் தங்கள் உணவு முறைகளில் மரபணு மாற்றப் பயிர்கள் இருக்கக்கூடாது என விரும்புவதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் மரபணு மாற்ற கடுகுக்கான ஒப்புதல் வழங்குவது பல மாநிலங்கள் எழுப்பிய கடுமையான எதிர்ப்பையும் மீறி நடந்துள்ளது. எனவே, மரபணு மாற்றக் கடுகு பயிரிட வழங்கப்பட்ட ஒப்புதலைத் திரும்பப் பெறுவது பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE