புதுடெல்லி: "திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 292 கொடையாளர்கள் இதுவரை உறுப்பு தானங்களை செய்துள்ளனர். அவர்கள் அளித்த உறுப்புகளின் பயன்பாடு என்பது, 1162 ஆக இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்றைக்கு உறுப்பு தானம் என்பது ஓர் இயக்கமாக இருந்து வருகிறது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
National Organ and Tissue Transplantation Organization (NOTTO) எனும் அமைப்பின் மூலம் 13-வது இந்திய உறுப்பு தான தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியா முழுமைக்கும் உறுப்பு தான சிகிச்சைகள், மாற்று சிகிச்சைகள் அதேபோல் அதற்கான விழிப்புணர்வு போன்ற பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிற மாநிலங்கள் மற்றும் தனி மனிதர்கள், அமைப்புகள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதன்படி இந்திய அளவில் உறுப்பு தான திட்டத்தில் சிறப்பான செயல்பாட்டுக்காக சிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்ந்தெடுத்து State Organ and Tissue Transplantation Organization (SOTTO) என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: "இதன் மூலம் தமிழகம், ஏற்கெனவே கடந்த காலங்களில் பெற்றிருந்த இந்த சிறப்புக்குரிய தகுதியை தொடர்ந்து நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 2008ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் ஹிதேந்திரன் என்ற மாணவன் சாலை விபத்தில் மரணம் அடைந்த நேரத்தில் அவருடைய உறுப்புகளை பெற்றோர்கள் மனம் உகந்து உறுப்பு தானம் செய்தார்கள். அது அன்றைக்கு பெரிய அளவிலான செய்தியாக வந்தது, தொடர்ச்சியாக அன்றைய முதல்வர் கருணாநிதி, அந்த பெற்றோர்களை அழைத்து, அவர்களை கவுரவித்து, அவர்களுடைய அந்த சிறந்த குணத்துக்காக பாராட்டினார்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் இன்றைய முதல்வர், நேரடியாகவே திருப்போருர் பகுதிக்கு சென்று ஜித்தேந்திரனின் பெற்றோர்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அப்பொழுது தான் கருணாநிதியால், 2008 செப்டம்பர் மாதம் மூளைச்சாவு அடைந்தவர்களிடத்திலிருந்து உறுப்புகளை பெற்று அதன் மூலம் மற்றவர்களுக்கு பொருத்துகிற அந்த மகத்தான திட்டத்தை அறிவித்து, தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் என்கின்ற ஒரு திட்டத்தை தொடங்கினார். அந்த திட்டம் இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியான திட்டமாக இருந்தது. தொடர்ச்சியாக அந்த திட்டமானது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமாக உருவாக்கப்பட்டது.
» மணிப்பூர் வன்முறை | ஐகோர்ட் விசாரணைக்குப் பின் ‘மாஸ் நல்லடக்க’ முடிவை தள்ளிவைத்த பழங்குடியினர்
தற்போது தமிழகத்தில் 40 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும், 120 தனியார் மருத்துவமனைகளிலும் இந்த Organ Harvest License உள்ளது. இந்தியாவிலேயே உறுப்பு தானம் அதிகமாக பெறக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இப்படி மிகச் சிறப்பான கட்டமைப்பினை பெற்றிருக்கிற காரணத்தினாலும், தொடர்ந்து இதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கணையம் மாற்று அறுவை சிகிச்சை, இதயமாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை கிச்சை, கருவிழி மாற்று அறுவை கிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவை கிசிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை என்று பல வகைகளில் உறுப்பு மாற்று அறுவை கிச்சைகள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மட்டுமே உறுப்பு மாற்று சிகிச்சை இருந்தது. இந்த அரசு பொறுப்பேற்றபிறகு டாக்டர் ரேலாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையிலும், கோவை, மதுரை போன்ற அரசு மருத்துவமனைகளிலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற துவக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் 4 கல்லீரல் மாற்று அறுவை கிசிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 4 பேரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றார்கள். இதன்மூலம் ஏழை எளியவர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் உடல் உறுப்பு தானங்கள் மக்களிடத்தில் விழிப்புணர்வு பெற்றிருக்கிறது. ஆக இன்றைக்கு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் 22 லட்சம் ரூபாய் அளவுக்கு கூட உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான அரசு சார்பில் காப்பீட்டு திட்டத்தின்மூலம் மக்கள் பயன்பெற்று கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை மொத்த உறுப்பு மாற்று பயனாளர்கள் 2008க்குப் பிறகு 1705 பேர் தந்து இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இப்படி 1705 பேர் தந்து இருக்கின்ற உறுப்புக் கொடைகளின் மூலம் 6267 பேருக்கு பயன் அடைந்துள்ளனர். இதில் இதயம் 786 பேருக்கும், நுரையீரல் 801 பேருக்கும், கல்லீரல் 1565 பேருக்கும், சிறுநீரகம் 3046 பேருக்கும், கணையம் 37 பேருக்கும், சிறுகுடல் 6 பேருக்கும், வயிறு 2 பேருக்கும், கைகள் 4 பேருக்கும், மொத்த திசுக்கள் 3946 என்று இதுவரை 6267 உறுப்புக் கொடைகள் இன்று வரை வழங்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குறிப்பாக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, 292 கொடையாளர்கள் இதுவரை உறுப்பு தானங்களை செய்திருக்கிறார்கள். அவர்கள் அளித்த உறுப்புகளின் பயன்பாடு என்பது 1162 ஆக இருக்கிறது. எனவே அந்த வகையில் உறுப்பு தானம் என்பது தமழகத்தில் ஒரு இயக்கமாக மிகச் சிறப்பாக பயன்பாட்டில் இருந்துக் கொண்டிருக்கிறது.
கடந்த நிதிநிலை அறிக்கையில் "விடியல்" என்கின்ற ஒரு தானியங்கி செயலி இதற்காக அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தோம். அந்தவகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக நோயாளிகளின் உடல் உறுப்புகளை கண்காணிக்க அந்த தானியங்கி இணையதளம் மற்றும் செயலி கடந்த ஆகஸ்ட் 13, 2021 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த செயலியில் கடந்த ஒன்றரை வருடங்களாக வெளிப்படத்தன்மையிலும், மூப்பின் அடிப்படையிலும் நோயாளிகளுக்கு உறுப்பு ஒதுக்கீடுகளை அரசு வெளிப்படையாக செய்து வருகிறது. அதற்காக விடியல் என்கின்ற தானியங்கி இணையதளம் மிகச் சிறந்த வகையில் பயன்பாட்டில் இருக்கின்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் நானும், நமது துறையின் செயலாளர் அவர்களும் பங்கேற்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுடான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான இணையதள கருத்தரங்கம் நடத்தியிருக்கிறோம். அந்த கருத்தரங்கில் 500 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக உறுப்பு மாற்று, உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், அதற்கான விழிப்புணர்வு போன்ற பணிகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கின்றது. அதனை பாராட்டும் விதமாக இன்று Best State விருது தந்திருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 secs ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago