அண்ணாமலை யாத்திரைக்கு முகூர்த்தக்கால் நட்ட மதுரை பாஜகவினர்

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரையில் அண்ணாமலை பாத யாத்திரை பொதுக்கூட்டத்துக்கு பாஜகவினர் முகூர்த்தக்கால் நட்டனர்.

மதுரை பழங்காநத்தம் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் ‘என் மண், என் மக்கள்’ நிகழ்ச்சி பொதுக்கூட்டத்துக்கான முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பார்வையாளர்கள் கார்த்திக் பிரபு, ராஜ ரத்தினம் ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், துணை தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கதலி நரசிங்க பெருமாள், மகா சுசீந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: "பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண், என் மக்கள்" பாத யாத்திரை மதுரையில் ஆகஸ்ட் 5-ல் ராமகிருஷ்ணா மடத்தில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. உழவர் சந்தை, பி.பி.குளம், நரிமேடு, செல்லூர் 50 அடி ரோடு வழியாக வந்து கோபுரம் திரையரங்கு முன்பு பொதுமக்களிடம் பேசுகிறார்.

பின்னர் மாலை 4.30 மணி அளவில் பெரியார் பேருந்து நிலையம் அருகே நேதாஜி சாலை ரவுண்டானாவில் துவக்கி ஜான்சி ராணி பூங்கா வழியாக செல்கிறார். அங்கு தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி, தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து நகைக்கடை பஜார் வழியாக சென்று கீழ மாசி வீதி தேர் நிறுத்தம் அருகே பொதுமக்களை சந்திக்கிறார். மாலை 6 மணிக்கு காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு முனிச்சாலை வழியாக சென்று தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோயிலில் அருகே பொதுமக்களிடம் பேசுகிறார். ஆகஸ்ட் 6-ல் மதுரையில் முக்கிய சமுதாய பெரியோர்களுடன் சந்திப்பு நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 7-ல் ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் யாத்திரை தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகே பொது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத் இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்" என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE