‘சிகிச்சைக்கு ஏங்கும்’ உரிகம் ஆரம்ப சுகாதார நிலையம் - மருத்துவ வசதிக்கு பரிதவிக்கும் 35 மலைக் கிராம மக்கள்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர், செவிலியர் இல்லாத நிலையில், மருத்துவ வசதி கிடைக்காமல் 35 மலைக் கிராம மக்கள் பரிதவிக்கும் நிலையுள்ளது.

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட பகுதிகள் மலைகள் மற்றும் வனப்பகுதிகளால் சூழ்ந்துள்ளன. இப்பகுதி மக்களுக்கு தங்கள் வசிக்கும் இடத்தில் மருத்துவ வசதி கிடைக்காததால், நீண்ட தூரம் பயணம் செய்யும் அவலம் இருந்து வருகிறது. அஞ்செட்டியிலிருந்து 20 கிமீ தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள உரிகம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இக்கிராமத்தை சுற்றிலும் கோட்டையூர், வீரனப்பள்ளி, ஜீவநத்தம், பிலிக்கல், நூருந்துசாமி மலை, உடுபராணி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் உள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் அவசர சிகிச்சைக்கு உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், 50 கிமீ தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டைக்குச் செல்லும் நிலையுள்ளது.

இது தொடர்பாக உரிகத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் கூறியதாவது: உரிகம் கிராமத்தைச் சுற்றிலும் 35 மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பயன்பெறும் உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டும் உள்ளார். போதிய செவிலியர்களும் இல்லை. உள்நோயாளிகளுக்கு 5 படுக்கை வசதி மட்டுமே உள்ளது.

மேலும், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க 3 இன்குபேட்டர்கள் உள்ளன. இதில் 2 பழுதாகி உள்ளன. மேலும், இதற்காக யுபிஎஸ் வசதியுள்ளது. ஆனால், அது சிறிது நேரம் மட்டும் இயங்கும் நிலையில் உள்ளது. மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர் வசதியில்லை.

மலைக் கிராம மக்களின் நலன் கருதி சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விஷக்கடி சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக சுகாதார நிலைய ஊழியர்கள் கூறியதாவது: இங்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு வந்த செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களை மகப்பேறுக்கு தேன்கனிக்கோட்டை, ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்புகிறோம். இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மீண்டும் மின்சாரம் வர 2 நாள் வரை ஆகிறது.

சுற்றுச்சுவர் இல்லாததால், அடிக்கடி இரவு நேரங்களில் வனவிலங்குகள் சுகாதார நிலைய வளாகத்தில் சுற்றுவதால், இரவு பணியில் அச்சத்துடன் இருக்கும் நிலையுள்ளது. போதிய மருத்துவர், செவிலியர் இல்லாததால் சிகிச்சைக்கு வருவோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால், தேன்கனிக்கோட்டை, ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நகரப் பகுதியில் உள்ள நவீன மருத்துவ வசதிக்காக இந்த மலைக் கிராம மக்கள் ஏங்கவில்லை. கர்ப்பிணிகள் மற்றும் விஷக் கடியால் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்