மின் கட்டணம் குறைக்கப்படாததால் மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் ஓபன் எண்ட் நூற்பாலை துறையினர் 

By இல.ராஜகோபால்

கோவை: மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ஓபன் எண்ட் நூற்பாலை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கழிவுப் பஞ்சை பயன்படுத்தி நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் (ஓஇ) நூற்பாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 600 ஓஇ நூற்பாலைகள் உள்ளன.

இவற்றில் பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கழிவுப்பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நிதி நெருக்கடி ஏற்படுவதாக கூறி, கடந்த மாதம் முதல் வாரத்தில் எம்எஸ்எம்இ பிரிவை சேர்ந்த 400 ஓபன் எண்ட் நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

அதேபோல, பஞ்சு கொண்டு நூல் தயாரிக்கும் நூற்பாலைகள் தமிழகத்தில் 2,000 உள்ள நிலையில். மின்கட்டண உயர்வால் எம்எஸ்எம்இ பிரிவை சேர்ந்த 1,000 நூற்பாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவர்களும் கடந்த மாதம் உற்பத்தி நிறுத்தத்தை தொடங்கினர்.

கடந்த ஜூலை 23-ம் தேதி, சென்னையில் அனைத்து ஜவுளித்தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் மின்சாரத்துறை, சிறு தொழில்கள்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உற்பத்தி நிறுத்த போராட்டத்தை பெரும்பாலான தொழில் அமைப்பினர் வாபஸ்
பெற்றனர்.

இந்நிலையில், மின் கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட நூற்பாலை தொழில்துறையினர் முடிவு செய்துள்ளனர். மறுசுழற்சி ஜவுளித் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “கடந்த 10 நாட்களுக்கு முன் சென்னையில் மூன்று அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருப்பினும் இதுவரை அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்திருந்த பின் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “சென்னையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் எல்டிசிடி மின் கட்டண உயர்வு ஓஇ நூற்பாலைகளை கடுமையாக பாதித்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் உற்பத்தி நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 10 நாட்கள் கடந்த பின்பும் அரசிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை.

எம்எஸ்எம்இ பிரிவை சேர்ந்த ஓஇ நூற்பாலைகளுக்கு ரூ.50 ஆயிரம் மின்கட்டண மானியம் அறிவிக்க வேண்டும். எல்டிசிடி பிரிவை சேர்ந்த மின் நுகர்வோர் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்த உதவும் வகையில் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். உயர்அழுத்த (எச்டி) மின்நுகர்வோருக்கு டிமாண்ட் கட்டணத்தை குறைத்து பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் டிமாண்ட் கட்டணம் வசூலிக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE