போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சென்னை வியாசர்பாடி தாமோ தரன் நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் கோபால்(25) மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட சில அடிதடி வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் சட்டத்தில் கைதாகி கடந்த 5 நாட்களுக்கு முன்பு விடுதலையானார். இந்நிலையில் ஒரு வழிப்பறி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கோபாலை செவ்வாய்கிழமையன்று போலீஸார் அழைத்துச் சென்றனர். மறுநாள் காலையில் கோபாலை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் கொடுங்கையூர் போலீஸ் நிலையம் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த காவலர்கள் கோபாலுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கோபாலின் வருகைக்காக போலீஸ் நிலையத்திலேயே அவரது உறவினர்கள் காத்திருந்தனர். அப்போது ஒரு காவலர் வந்து, கோபால் இறந்து விட்டதாகவும் அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி உறவினர்களிடம் கேட்டபோது, “விசாரணை நடத்த வேண்டும் என்று இரண்டு போலீஸ்காரர்கள் வந்து கோபாலை அழைத்துச் சென்றனர். அங்கு செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ள செய்வதற்காக போலீஸார் அவனை அடித்துள்ளனர். இதில் கோபால் இறந்துவிட்டார். கோபாலை கொலை செய்த போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, “நாங்கள் கோபாலின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வரவில்லை. வழிப்பறியில் ஈடுபட்டதாக பொதுமக்கள் சிலர் கோபாலை பிடித்து அடித்து, உடல் முழுவதும் காயங்களுடன் எங்களிடம் ஒப்படைத்தனர். காவல் நிலையத்துக்கு வெளியில் வைத்து கோபாலிடம் விசாரணை நடத்தும்போதே அவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். உடனே அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அவர் இறந்து விட்டார். நாங்கள் யாரும் அவரை அடிக்கவில்லை. பொதுமக்கள் தாக்கியதில்தான் கோபால் இறந்து விட்டார்” என்றனர்.

இதுகுறித்து நாம் விசாரித்த போது மேலும் பல தகவல்கள் கிடைத்தன. கேட் ராஜேந்திரன் கொலை வழக்கில் கோபாலுக் கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை பெறு வதற்காக செவ்வாய்கிழமை இரவே போலீஸார் கோபாலை பிடித்து கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தங்கள் பாணியில் கோபாலிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

உறவினர்கள் முற்றுகை

போலீஸ் நிலையத்தில் மரணம் அடைந்த கோபாலின் உடலை கழிவறையில் போட்டு மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறவுள்ளது. கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் விடுமுறையில் சென்றிருந்த நிலையில், வியாசர்பாடி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் கோபாலிடம் விசாரணை நடந்துள்ளது. இந்த விசாரணையின்போது கோபால் இறந்ததைத் தொடர்ந்து ஆய்வாளர் சங்கரை சஸ்பென்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE