ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் கவனம் ஈர்த்த உண்ணிக் குச்சி யானைகள்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் வனத்துறை கண்காட்சி அரங்கில் இடம்பெற்றிருந்த உண்ணிக் குச்சி யானைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வளாகத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் வனத்துறை சார்பிலும் ஓர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கையொட்டி உண்ணிக் குச்சிகளால் தயார் செய்யப்பட்ட பெரிய யானை ஒன்றும், குட்டி யானை ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. நிஜ யானைகளைப் போன்றே மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த யானைகள் பார்வையாளர்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.

நேற்று விழாவுக்கு வருகை தந்த பலரும் இந்த யானைகளுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும், புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.

வனத்துறை வழிகாட்டுதலுடன் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பழங்குடியின மக்களால் செயல்படுத்தப்பட்டு வரும் ஷோலா டிரஸ்ட் என்ற அமைப்பு இதுபோன்ற யானைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அங்கிருந்து தருமபுரி கண்காட்சி அரங்குக்கு இந்த யானைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த யானைகளுடன் வந்திருந்த அந்நிறுவன பணியாளர் பாப்பண்ணா இதுகுறித்து கூறியது:

வனப்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வளர்ந்திருக்கும் உண்ணிச் செடி குச்சிகளை வெட்டி வந்து வேகவைத்து அதன் பட்டைகளை உரித்தெடுப்போம். ஈரம் சற்றே உலர்ந்ததும், ஏற்கெனவே இரும்பு மூலம் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள ஃபிரேமைச் சுற்றி இக்குச்சிகளையும், சிறு ஆணிகளையும் பயன்படுத்தி யானை உருவங்களை உருவாக்குகிறோம். குட்டி யானைகள், பெரிய யானைகள் என இதுவரை 6 ஆண்டுகளில் 300 யானைகளை தயாரித்துள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு சென்று விட்டன. 8 அடி உயரம் கொண்ட யானை தயாரிக்க 4 பேர் 1 மாதம் பணியாற்ற வேண்டும். 10 அடி உயரம் கொண்டு ஒரு யானை ரூ.10 லட்சம் வரை விலை போகும். இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE