சென்னை: “மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஓபிசி உள் இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், “ஓபிசி வகுப்பில் 5.60 விழுக்காடு சாதிகள் 75.02 விழுக்காடு பயன்களை அனுபவிக்கின்றன. இத்தகைய சமூக அநீதி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை 6 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிகவும் தாமதம் என்றாலும், இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.
இந்தியாவில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும் கூட பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பான்மையான மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பயன்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த சமூக அநீதி குறித்து பல ஆண்டுகளாகவே பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வந்த நிலையில் தான், அது பற்றி ஆய்வு செய்யவும், உள் ஒதுக்கீடு பற்றி பரிந்துரைப்பதற்காகவும் 02.10.2017 அன்று நீதிபதி ரோகிணி தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. 3 மாதங்களில், அதாவது 2018-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிக்குள் ஆணையம் அறிக்கை அளித்திருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டுமானால், அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான் தீர்வு ஆகும். அதைக் கருத்தில் கொண்டு தான் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு 6 ஆண்டுகள் தாமதமாகி விட்ட நிலையில், இனியும் தாமதிக்காமல், பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதியாக அமையும். ஓபிசி உள் இடஒதுக்கீடு வழங்குவதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஓபிசி வகுப்பினருக்கு செய்யப்படும் சமூக அநீதியாகவே பார்க்கப்படும்.
» முதியவருக்கு எய்ட்ஸ் பாதித்ததாக தவறான தகவல்: மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்
» மேட்டூர் | காவிரி ஆற்றை ஒட்டிய படித்துறையில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியதன் தேவையையும், அவசரத்தையும் வலியுறுத்துவதற்காக சில புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஓபிசி வகுப்பில் மொத்தம் 2633 சாதிகள் உள்ளன. அவர்களில் 983 சாதிகளுக்கு, அதாவது 37.33 விழுக்காட்டினருக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டால் இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அதேபோல், மேலும் 994 சாதிகளுக்கு, அதாவது 37.75 விழுக்காட்டினருக்கு 2.66% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் 75 விழுக்காடான 1977 சாதிகளுக்கு 2.66% இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. இது மிகக் கொடிய சமூக அநீதியாகும்.
அதேநேரத்தில், மற்றொருபுறம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 10 சாதிகள் மட்டுமே, அப்பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் 24.95 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன; மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன. அதாவது, ஓபிசி வகுப்பில் 5.60 விழுக்காடு சாதிகள், 75.02 விழுக்காடு பயன்களை அனுபவிக்கின்றன. இத்தகைய சமூக அநீதி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்?
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது சமூக நீதிக்கும் பொருந்தும். மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அவர்களால் இன்னும் 12 விழுக்காடு பிரதிநிதித்துவத்தைக் கூட எட்ட முடியவில்லை. அதற்கு காரணம் ஏற்கெனவே அரசு வேலைவாய்ப்புகளை அனுபவித்து வரும் சமூகங்கள், தங்களுக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி, வேலைவாய்ப்புகளை விட்டுத் தர மறுப்பது தான். ஓபிசி உள் இட ஒதுக்கீட்டிலும் இதே சூழல் தொடரும். எந்த அளவுக்கு விரைவாக உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தான் பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு சமூகநீதி கிடைக்கும்.
இந்த உண்மையை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, தற்போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதன் மூலம், அதன் விவரங்கள் மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்து, அதனடிப்படையில் ஓபிசி உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை அடுத்தக் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago