என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை: சென்னை கூடுவாஞ்சேரி அருகே நடந்தது என்ன?

By பெ.ஜேம்ஸ்குமார்


வண்டலூர்: சென்னை கூடுவாஞ்சேரி அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற 2 ரவுடிகள், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பிய அவர்களது கூட்டாளிகளை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அருகே ஆதனூர் பகுதி திமுக விவசாய அணி செயலாளர் சக்கரபாணி என்பவரிடம் மாமூல் கேட்டு சில ரவுடிகள் தகராறு செய்துள்ளனர். அவர் மாமூல் தர மறுத்ததால், அவரை வெட்டியுள்ளனர் இதுதொடர்பாக மணிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சோட்டா வினோத், ரமேஷ் உள்ளிட்ட சிலரை தேடி வந்தனர்.

இந்நிலையில், குற்றவாளிகள் சொகுசு காரில் தப்பி செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வேகமாக வந்த காரை நிறுத்துமாறு போலீஸார் கைகாட்டினர். நிற்காமல் வந்த கார், போலீஸ் வாகனம் மீது பயங்கர வேகத்தில் மோதியது. காரில் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கிய 4 பேர், போலீஸாரை சரமாரியாக தாக்கினர்.

இதில், உதவி ஆய்வாளர் சிவகுருநாதனின் இடது கையில் வெட்டு விழுந்தது. அவரது தலையிலும் ரவுடிகள் அரிவாளால் வெட்ட முயன்றனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆய்வாளர் முருகன், அவர்களை எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி சுட்டார்.

அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக, ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இருவரும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

காயமடைந்த இருவரும் பிரபல ரவுடிகளான சோட்டா வினோத், ரமேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது. சோட்டா வினோத்தின் தோள் பட்டை, கால் உள்ளிட்டஇடங்களிலும், ரமேஷின் வயிறு,கையிலும் குண்டுகள் பாய்ந்திருந்தன. இதையடுத்து, உடனடியாக அவர்கள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகள்: என்கவுன்ட்டரில் உயிரிழந்த ரவுடி சோட்டா வினோத் (35) மீது 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக் கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் என 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி ரமேஷ் மீது 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரும் சென்னை ஓட்டேரிகாவல் நிலைய சரித்திர பதிவேடுகுற்றவாளிகள்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சென்னை ஓட்டேரியை சேர்ந்த பிரபல ரவுடிகள் சோட்டா வினோத், மண்ணிவாக்கம் ரமேஷ்.இவர்கள் சென்னை புறநகர் பகுதியில் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் என வசதிபடைத்தவர்களை போன் மூலம் தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வந்தனர்.

பணம் தர மறுப்பவர்களை வழிமறித்து தாக்குவது, வெட்டுவது கொலை முயற்சியில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை.

இந்நிலையில், இவர்கள் இருவரும் ஆதனூர் பகுதியில் திமுக பிரமுகரை மிரட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அவர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சோட்டா வினோத், ரமேஷை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், தங்கள் கூட்டாளிகளுடன் சொகுசு காரில் வந்த சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவரும் போலீஸாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றபோது என்கவுன்ட்டர் நடந்துள்ளது. தலைமறைவானவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடவடிக்கை தொடரும்: டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி - தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்து, காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதனிடம் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் டிஜிபி கூறியதாவது:

கூடுவாஞ்சேரி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முற்பட்டுள்ளனர். அப்போது, உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரை, காரில் வந்தவர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளர் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தேன் தப்பிச் சென்ற 2 பேர் மீதும் கொலை வழக்குகள் உள்ளன. அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் என்கவுன்ட்டர் நடந்த இடத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எப்படி என்கவுன்ட்டர் நடந்தது என்று அவரிடம் போலீஸார் விளக்கினர். தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். தப்பியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்