தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை; அங்காடி, ரேஷன் கடைகளில் மக்கள் குவிந்தனர்: தக்காளி கொள்முதலுக்கு ஆந்திரா விரைந்த அதிகாரிகள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ள நிலையில், ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத் திருந்து வாங்கிச்சென்றனர்.

இதற்கிடையே, தக்காளி வரத்து மிகவும் குறைவாக இருப்பதால், ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம்முதல் தக்காளி விலை சிறிது சிறிதாகஉயரத் தொடங்கியது. ஒரு கிலோ ரூ.60 என தொடங்கி ரூ.120, 140 வரை சென்றது. இதையடுத்து, தமிழக அரசு விலை கட்டுப்படுத்தும் நிதியத்தில் உள்ள நிதியை பயன்படுத்தி, குறைந்தவிலையில் தக்காளி விற்பனையை தொடங்கியது. அதன்படி, முதல் கட்டமாக67 பண்ணை பசுமை கடைகளில்ஒரு கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்பட்டது.

500 ரேஷன் கடைகள்: அதன்பின், பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று, 111 ரேஷன் கடைகளில் விற்கப்பட்டது. இந்நிலையில், தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை தாறுமாறாக ஏறியது. நேற்று முன்தினம் சில்லறை விலையில் ரூ.180 முதல் ரூ.200 வரை ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்டது. சில பகுதிகளில் ரூ.160-க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அலைமோதிய கூட்டம்: இதன்படி, நேற்று முதல் தமிழகத்தில் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. இதுதவிர, அமுதம், காமதேனு அங்காடிகளில் தக்காளி மட்டுமின்றி துவரம்பருப்பு, உளுந்து ஆகிய வையும் மானிய விலையில் விற்கப்பட்டு வருகிறது. இதனால், நேற்று தக்காளி விற்கப்படும் ரேஷன் கடைகள், அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து, ஒரு கிலோ தக்காளியை வாங்கிச் சென்றனர்.

தமிழக கூட்டுறவுத்துறையை பொறுத்தவரை வெளிச்சந்தையில் கிடைக்கும் தக்காளியை அதிக விலைக்கு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது. தினசரி வரத்தை கணக்கிட்டு 5 ஆயிரம் டன் வரைகொள்முதல் செய்யப்பட்டு வரு கிறது. இதை ஒரு கடைக்கு 50 கிலோ முதல் 100 கிலோ வரை பிரித்து வழங்கப்படுகிறது.

எனவே, முதலில் வரும் 50 அல்லது 100 பேருக்கு மட்டுமே குறைந்த விலையி்ல் தக்காளி கிடைக்கும் நிலை உள்ளது. இதனால், பலரும் தக்காளி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொள்முதல் நடவடிக்கை: இந்த சூழலில், தக்காளி வரத்துமேலும் குறைந்துள்ளதால், கொள்முதலுக்காக ஆந்திராவுக்கு தமிழக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். அங்கு கிடைக்கும் தக்காளியை தேவைக்கேற்ப கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE