தமிழகத்தில் தனியாரிடம் குப்பை சேகரிப்பு பணி ஒப்படைப்புக்கு இ.கம்யூ. எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகராட்சியின் 43-வது வார்டு கவுன்சிலர் மல்லிகா புருசோத்தமன், மேயர் கல்பனா ஆனந்த குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை. நிரந்தர தன்மை உள்ள வேலைகளை, நிரந்தர தொழிலாளர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கருத்தாகும்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரந்தர தன்மை உள்ளதாகும். மேற்கண்ட பணியிடங்கள் முழுவதும் வெளியாட்கள் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்டால், ஒரு லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த, 5 லட்சம் பேர் சிரமத்துக் குள்ளாவார்கள்.

மாமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பறிப்பது போல, தமிழக அரசு அவுட் சோர் சிங் முறையை மாநகராட்சி மீது திணிப்பதை இந்திய கம்யூனிஸ்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. நிலம், நீர், கட்டிடம், மின்சாரம், திடக் கழிவுகளை அப்புறப் படுத்தும் வாகனங்கள், அந்த வாகனங்கள் சுமக்கும் பெட்டிகள் அனைத்தும் மாநகராட்சியின் வரிப்பணத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய உள்கட்டமைப்பு வசதிகளையும், ரூ.170 கோடி மக்கள் வரிப்பணத்தையும் தனியாருக்கு கொடுப்பது நியாயமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE