மெட்ரோ ரயிலில் ஜூன் மாதத்தைவிட ஜூலை மாதத்தில் கூடுதலாக 8.46 லட்சம் பேர் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளிக்கிறது. இதன் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் கூடுதலாக 8 லட்சத்து 46 ஆயிரத்து 816 பேர் பயணித்துள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஜூலை மாதத்தில் 82 லட்சத்து 53 ஆயிரத்து 692 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக, கடந்த 28-ம் தேதி 3 லட்சத்து 8 ஆயிரத்து 495 பேர் பயணம் செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 29 லட்சத்து 10 ஆயிரத்து 875 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 48 லட்சத்து 85 ஆயிரத்து 843 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 2 லட்சத்து 97 ஆயிரத்து 348 பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,382 பேரும், சிங்காரச் சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 244 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE