பணியிலும், குடும்ப வாழ்விலும் சிறந்து விளங்க போலீஸ் அதிகாரிகளுக்கு நிறைவாழ்வு பயிற்சி: காவல் ஆணையர் முகாமை தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: பணியிலும், குடும்ப வாழ்விலும் சிறந்து விளங்க போலீஸ் அதிகாரிகளுக்கு நிறைவாழ்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 3 நாள் பயிற்சி முகாமை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.

போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பணியிலும், குடும்ப வாழ்விலும் சிறந்து விளங்கவும், மன நலனையும், உடல் நலனையும் பேணிக் காக்கும் வகையிலும் சென்னையில் அவ்வப்போது நிறைவாழ்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் காவல் துறையினருக்கு தகுந்த மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த மாதம் 15-ல் ஆணையர்கள் முதல் கூடுதல் ஆணையாளர்கள் வரை போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறைவாழ்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையரகத்தில் உதவி ஆணையர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையாளர்களுக்கு 3 நாள் நிறைவாழ்வு பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது.

இதை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். மேலும் இந்த பயிற்சி முகாம் வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் தங்களின் கீழ் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் நலனைக் கையாள்வது, குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வது குறித்தும், பணியின் போது சகக் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் நடந்து கொள்ளும் முறை குறித்தும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சி வகுப்பை, காவல் நிறைவாழ்வு நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவர் ராமசுப்பிரமணியன், மூத்த மனநல மருத்துவர் பிரபாகர், மனநல மருத்துவர் லட்சுமி, மனநல ஆலோசகர்கள் சத்யதனக்கோடி மற்றும் மொஹிதீன் பாட்ஷா ஆகியோர் நடத்தி, மனநலம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்தும், அதனை திறம்பட எதிர்கொள்வது குறித்தும் எடுத்துரைத்தனர்.

இப்பயிற்சி வகுப்பு அனைத்து போலீஸாருக்கும் படிப்படியாக நடத்தப்படும் என காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE