இந்தோனேசியா குவாளா நாமு நகருக்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தோனேசியா - சென்னை இடையே நேரடி விமான சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்தோனேசியா நாட்டின் சுற்றுலாத் தலமான குவாளா நாமுவுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. அதனால், மலேசியா அல்லது சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்று, அங்கு இருந்து இணைப்பு விமானஙகள் மூலம் குவாளாநாமுவுக்கு பயணிகள் செல்கின்றனர்.

குவாளா நாமுவில் இருந்து சென்னை வர வேண்டிய பயணிகளும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகள் வழியாக வருகின்றனர். இணைப்பு விமானங்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் பயண நேரம் அதிகரிப்பது மட்டுமின்றி கூடுதல் செலவு ஆகிறது. அதனால், நேரடி விமான சேவையை தொடங்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி, இந்தோனேசியா நாட்டில் உள்ள பாடிக் ஏர் விமான நிறுவனம், குவாளா நாமு - சென்னை - குவாளா நாமு இடையே தினசரி நேரடி விமான சேவையை நேற்று தொடங்கியது.

குவாளா நாமுவில் இருந்து மாலையில் புறப்படும் விமானம் இரவு 9.45 மணிக்கு சென்னை வருகிறது. சென்னையில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் விமானம் குவாளா நாமுக்கு அதிகாலை 4 மணிக்கு சென்றடைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE