முருகனின் முதல் படை வீட்டில் மேற்கூரை இல்லாத பஸ் நிறுத்தம்: திருப்பரங்குன்றத்தில் புதிய பேருந்து நிலையம் அமையுமா?

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: முருகனின் முதல் படை வீடான திருப்பரங் குன்றத்தில் மேற்கூரை இல்லாத பஸ் நிறுத்தத்தில் மழை, வெயிலில் நின்று பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆறுபடை வீடுகளில் முருகனின் முதல் படை வீடாக திருப்பரங்குன்றம் கோயில் உள்ளது. தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்கள் ஒன்றாக இந்த வழிபாட்டுத்தலம் திகழ்கிறது. இந்த கோயிலில் நடக்கும் வைகாசி விசாகம், புரட்டாசி வேல் திருவிழா, ஆடி கிருத்திகை, திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர்.

மேலும் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கிரிவலம் வர ஆயிரக்கணக்கான பக் தர்கள் வருவார்கள். ஆனால், மற்ற ஆன்மிகத் தலங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் திருப்பரங்குன்றத்துக்கு வழங்கப்படுவதில்லை. வெயில், மழையில் சிரமப்படாமல் பக்தர்கள் பேருந்துகளில் ஏறி, இறங்கிச் செல்ல பேருந்து நிலையம் தற்போதுவரை அமைக்கப்படவில்லை.

திருப்பரங்குன்றத்தில் தியாகராசர் பொறியியல் கல்லூரி வளைவு பேருந்து நிறுத்தம், அதை தொடர்ந்து கோயில் பேருந்து நிறுத்தம் ஆகிய இரு நிறுத்தங்கள் செயல் படுகின்றன. இதன் நிழற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் பேருந்து நிறுத்தங்களில் நின்று ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர்.

புகழ்பெற்ற ஆன்மிக தலமான திருப்பரங்குன்றத்தில் பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரை கூட இல்லாமல் இருப்பதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். திருநகரைச் சேர்ந்த விஸ்வா கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் இரு பாலங்கள் வருவதற்கு முன்பு காய்கறி மார்க்கெட் அருகே பழைய பேருந்து நிலையம் செயல்பட்டது.

இந்த நிலையம் மதுரை நகரையும், சுற்றுவட்டார கிராமங்களையும் இணைக்கும் வகையில் இருந்தது. கிராமங்களில் இருந்து கோயிலுக்கு வரும் மக்கள் அருகேயுள்ள மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிச் செல்வர். தற்போது பாலம் கட்டிய பிறகு இந்த பேருந்து நிலையம் செயல்படாமல் முடங்கிப்போனது. அது வாகனங்கள் நிறுத்தமாக செயல்படுகிறது. திருப்பரங்குன்றம் வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பேருந்துகளில் ஏறிச் செல்ல பேருந்து நிலையம் அவசியம் தேவை என்றார்.

திருப்பரங்குன்றம் இளமுருகன் கூறுகையில், ‘‘திருப்பரங்குன்றம் நெருக் கடியான தெருக்களை கொண்ட நகராக உள்ளது. பாலங்கள் கட்டிய பிறகு ஊருக்குள் பேருந்து நிலையம் அமைக்க முடியாமல் போய் விட்டது. முன்பு பேருந்து நிலையம் இருந்த இடம் சுருங்கிப்போய் செயல்பட முடியாமல் போய்விட்டது.

ஊருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு நடப்பதாக பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். மக்கள் நிறைய பேர் வந்து செல்கிறார்கள். வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப தொலைநோக்கு பார்வையுடன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மெட்ரோ ரயில் நிலையமும் திருப்பரங்குன்றம் வழியாக வருகிறது.

அதனால் ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் அதற்கு திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ , மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE