குமரியில் தேசிய கொடியை உயர்த்தி பிடித்த கம்பீர கம்பம் களையிழந்த சோகம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மகாதானபுரம் சந்திப்பு ரவுண்டானா இந்தியாவின் தென்மூலையில் முடியும் முக்கிய மையமாக உள்ளது. இங்கிருந்து திருநெல்வேலி, திருவனந்தபுரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் பிரிந்து செல்கின்றன.

காஷ்மீரை இணைக்கும் நாற்கர சாலையும் இங்கு அமைந்துள்ளது. இதன் முக்கியத்துவம் கருதி ரவுண்டானா மையத்தில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைத்து, தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி பிரமாண்ட தேசிய கொடி இக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. ஆனால், கடலோரக் காற்றால் மறுநாளே கொடி சேதமடைந்தது.

அதன்பின் கொடி இறக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டது. பின்னர் தேசிய கொடியை பராமரிக்கும் உரிமை ராணுவத்திடம் வழங்கப்பட்டு, மீண்டும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி ஏற்றி வைக்கப்பட்டது. சில நாட்களில் காற்றின் வேகத்தில் மீண்டும் கொடி சேதமடைந்தது. அதன்பின் தேசிய கொடி இறக்கப்பட்டு தற்போது வெறும் கம்பம் மட்டுமே நிற்கிறது.

கொடியின் அளவை குறைத்து மீண்டும் ஏற்றிவைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதே நேரம் அப்பகுதி இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் கொடிக் கம்பத்தின் உச்சியில் மின்கோபுர விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ரவுண்டானாவைச் சுற்றிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொடிக் கம்பம் மற்றும் ரவுண்டானா பகுதியை தற்போது யாரும் கண்டுகொள்ளாத நிலையில், மின்கோபுர விளக்குகளும், சுற்றிலும் உள்ள மின் விளக்குகளும் எரியாமல் மகாதானபுரம் சந்திப்பு இருளில் மூழ்கியுள்ளது. அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட மகாதானபுரம் சந்திப்பு அருகே உள்ள வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்துக்கு முன் 150 அடி உயர கொடி கம்பம் மின்னொளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்வதுடன், அங்கு மீண்டும் தேசிய கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE