திருவண்ணாமலை: ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் வெள்ளை மண்ணை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைணவ வழிபாடு குறியீட்டில் ‘திருநாமம்’ முக்கியமானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிதிருவரங்கம், திருச்சி அடுத்த ஸ்ரீரங்கம், மதுரை கள்ளழகர் கோயில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி உள்ளிட்ட வைணவ திருத்தலங்களில் பக்தர்களின் நெற்றியில் திருநாமம் குறியீடு இருப்பதை காணலாம். மேலும் பல்லாயிரக்கணக்கான வைணவ பக்தர்கள், நெற்றியில் திருநாமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இத்தகையை பக்தி மிகுந்த திருநாமத்தை, நெற்றியில் இடுவதற்கு பயன்படுத்தப்படும் ‘நாமக்கட்டி’ திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிலில் 5 தலைமுறைகளை கடந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். குடிசைத் தொழிலாக, குடும்பத் தொழிலாக நாமக்கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கட்டி தயாரிப்பதற்கு தேவையான வெள்ளை மண், ஜடேரி அடுத்த தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. பின்னர் செக்கு இழுப்பதை போல் மாடுகளை கட்டி இழுத்து பவுடராக அரைக்கப்படுகிறது. பின்னர் தண்ணீரில் ஊரவைத்து, கழிவுகள் அகற்றப்படுகிறது. அதன்பிறகு, ஈர பதத்துடன் வெள்ளை மண் இருக்கும்போது, நாமக்கட்டிகளாக தட்டி, வெயிலில் காய வைத்து ரசாயனம் கலப்பில்லாமல் தயாரிக்கப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள வைணவ திருத்தலங்களுக்கு நாமக்கட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், திருமலை திருப்பதி முதன்மையாக உள்ளன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மேலும் மருத்துவ பயன்பாட்டுக்கும் நாமக்கட்டி பயன்படுத்தப்படுவதால், மருந்து தயாரிப்பாளர்களும் கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ நாமக்கட்டி, மிக குறைந்த விலையாக ரூ.30 என விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் “ஜடேரி நாமக்கட்டி”க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், நாமக்கட்டியை தயாரிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிபடுத்தி உள்ளனர். புவிசார் குறியீடு வழங்கக்கோரி, நாமக்கட்டி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி விண்ணப்பித்திருந்த நிலையில், புவிசார் குறியீடு வழங்கி, மத்திய அரசு அங்கீகரித்துள்ளன. இதன்மூலம் நாமக்கட்டி தயாரிக்கும் தொழில் சட்ட ரீதியாக பாதுகாக்கப்படும். விலை உயரவும், உலக நாடுகள் அங்கீகரிக்கவும் வாய்ப்புள்ளது.
கிடங்கு அமைக்க வேண்டும்: நாமக்கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறும்போது, “குலத் தொழிலாக நாமக்கட்டியை தயாரித்து வருகிறோம். ஜடேரி கிராமத்தில் ஆண்டுக்கு 100 டன் அளவுக்கு நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து, திருப்பதி உள்ளிட்ட வைணவ திருத்தலங்களக்கு கொண்டு செல்லப்படுகிறது. இத்தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் வெள்ளைபாறையை வெட்டி எடுக்க, அரசுக்கு பணம் செலுத்துகிறோம். ஒரு யூனிட் வெள்ளை பாறையை வெட்டி எடுத்து கொண்டு வர ரூ.5 ஆயிரம் செலவாகிறது. வெள்ளைபாறையை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும். மேலும் மழைக்காலங்களில் நாமக்கட்டியை உலர்த்த முடியாது என்பதால், கிடங்கு அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் ஜடேரியில் தயாரிக்கப்படும் நாமக்கட்டிக்கு ‘புவிசார் குறியீடு’ வழங்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இத்தருணத்தில் எங்களது கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago