மகளிர் உரிமைத் தொகைக்கு ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதி பயன்பாடு என்பது உண்மைக்குப் புறம்பானது: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் நிதி பிற திட்டங்களுக்காக பயன்படுத்தபடுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களின் நிதியை பயன்படுத்தியுள்ளதாக தேசிய பட்டியல் இனத்தினருக்கான ஆணையத்தில் ஒரு தனிநபர் புகார் அளித்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் சில செய்திகள் வெளிவந்துள்ளன. ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு முறையைப் பற்றிய தவறான புரிதலின் காரணமாக தான் இந்த புகாரும், அதனை பற்றிய செய்திகளும் எழுந்துள்ளன.

பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கமாகும். இந்தத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் மட்டுமே பயன்பெறத்தக்க திட்டங்களும், பொதுத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் பயன்பெறும் திட்டங்களும் உள்ளன. இந்த முறையின்படி, பொதுத் திட்டத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயன்களுக்கு நிதி தனியாக ஒரு தலைப்பின் கீழ் ஒதுக்கப்படுகிறது.

இத்தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை அப்பிரிவு மக்களக்கு மட்டுமே செலவிட இயலும். இந்தத் தனி ஒதுக்கீடு முறையை தான் ஒன்றிய அரசும், பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (நகர்ப்புரம்), அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) போன்ற முக்கிய திட்டங்களுக்கு இந்த முறையில் தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இதுபோன்றே, தமிழக அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் இலவச சீருடை போன்ற மாநில அரசின் திட்டங்களுக்கும் இதே முறையில் தான் பட்டியலினத்தவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதே போல் தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 7000 கோடி ரூபாயில், பட்டியல் இனத்தவருக்கென 1,540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்படுத்தும் இந்த மகத்தான புதிய திட்டத்தில் பட்டியலினத்தவர் விடுபடாமல், திட்டத்தின் பயன்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய, திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவருக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒதுக்கப்பட்ட 1,540 கோடி ரூபாயை பட்டியலினத்தவருக்கு மட்டும்தான் செலவிட இயலும். இது மட்டுமன்றி, கடந்த 2020-21 ஆம் ஆண்டு 13,680 கோடி ரூபாயாக இருந்த பட்டியலின மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஆதி திராவிடர் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு, 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 17,076 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடித்தளமாக கொண்டுள்ள இந்த அரசு, பட்டியலினத்தவரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது. பட்டியலினத்தவர், பழங்குடியின தொழில் முனைவோர்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்க ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம்’ 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஊரக மற்றும் நகர்புர பகுதிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய, 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டுடன், ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர், பழங்குடியின சமூகத்தினரின் புத்தொழில்களில் முதலீட்டு செய்வதற்கு, ‘தமிழ்நாடு ஆதி திராவிடர், பழங்குடியினர் புத்தொழில் நிதி’ 50 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் இந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டங்கள் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், இவ்வாண்டு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நிதியை சிறப்பாக செயல்படுத்திட ஒரு சிறப்பு சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கென பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பட்டியல் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, இச்சட்டம் மிக விரைவில் நிறைவேற்றப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் செலவினத்தை சிறப்பாக கண்காணிக்க நிதி துறையில் ஒரு சிறப்பு பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆதி திராவிடர் துணைத் திட்டத்தின் நிதியை பிற திட்டங்களுக்காக பயன்படுத்தபடுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. பட்டியலினத்தவரின் நலன் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் இந்த அரசு உறுதியாக உள்ளது. பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற இவ்வரசு இந்த நோக்கங்களை அடைய தொடர்ந்து செயல்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூகவலைதளப் பக்கத்தில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்