சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தக்காளி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வட மாநிலங்களில் பெய்த கனமழையால், தக்காளி விளைச்சல் குறைந்தது. விளைச்சல் குறைந்ததால்தான், இந்த அளவுக்கு தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் வரும் தக்காளி வரத்து குறைவால், விற்பனைக்கு வரும் தக்காளியின் அளவு குறைந்துள்ளது. எனவே, இது இயற்கையான விலையேற்றமே தவிர, செயற்கையானது அல்ல. வணிகர்கள் ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். அதனால்தான், தக்காளி விலையேற்றம் கட்டுக்குள் இருக்கிறது. தக்காளியை தமிழக அரசு கூடுதலான விலைக்கு வாங்கி, அதை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறோம். முதல்வர் இந்த விற்பனையை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து மூன்றாம் கட்டமாக, 300 நியாய விலைகடைகளுக்கு அதை விரிவுபடுத்தினோம். தொடர்ந்து பல மாநிலங்களில் இதே பிரச்சினை இருந்து வருகிறது. எனவே இந்த எண்ணிக்கை போதாது, இன்னும் பரவலாக்க வேண்டும் என்ற நோக்கில், நாளை முதல், தமிழகத்தில் குறைந்தது 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தக்காளி உற்பத்திக்கான பகுதிகளில் இருந்து போதுமான விளைச்சல் வரவில்லை என்பதுதான், நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வரக்கூடிய செய்தியாக இருக்கிறது. ஓரிரு வாரங்களில் இது சரியாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் தக்காளி உற்பத்தி அதிகரிக்கவில்லை என்பது கவலையளிக்கிறது" என்று அவர் கூறினார்.
ரூ.150 ஆக உயர்வு: முன்னதாக, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோரூ.150-ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாகத் தக்காளி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்ட நிலை யில், நேற்று கிலோ ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து இருக்கும். தற்போது வெவ்வேறு மாநிலங்களுக்கு தக்காளி அனுப்பப்படுவதால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரியாணி விலை உயருமா? - தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான ஹோட்டல்களில் தக்காளி சட்னிக்குப் பதிலாக, புதினா சட்னி வழங்கப்பட்டு வருகிறது. பிரியாணி ஹோட்டல்களில் தக்காளி முக்கியப் பயன்பாடு கொண்டதாக இருப்பதால், பிரியாணி விலையை ஏற்றுவது தொடர்பாக கடைக்காரர்கள் ஆலோசித்து வருகின்றனர். வீடுகளில் தக்காளி வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். பலர் தக்காளி பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி ஜாம்பஜார், மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, அரும்பாக்கம், எம்ஜிஆர் நகர், சைதாப்பேட்டை போன்ற சந்தைகளில் கிலோரூ.180 முதல் ரூ.200 வரை சில்லறை விலையில் தக்காளி விற்கப்படுகிறது. வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் உள்ள காய்கறி சந்தைகளில், சிறிய அளவிலான தக்காளி கிலோ ரூ.120 அளவில் விற்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், பண்ணைப் பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால், அங்கு கூட்டம் அலை மோதுகிறது. விரைவிலேயே தக்காளி விற்றுத் தீர்ந்துவிடுகிறது. எனவே, கூடுதலாக விற்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னை அண்ணா சாலை, தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சிறப்பங்காடியில் பொதுமக்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து, தக்காளி வாங்கிச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago