அகவிலைப்படி உயர்வு வழங்குமாறு 2 வாரங்களில் முதல்வருக்கு 15 ஆயிரம் கடிதம்: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அனுப்பியுள்ளனர்

By செய்திப்பிரிவு

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு கடந்த 2 வாரங்களில் 15 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்பட்டதாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் செலவை ஈடுசெய்ய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அகவிலைப்படியாக வழங்குவது வழக்கம். இந்தத் தொகை அவ்வப்போது உயர்த்தப்படும். அதன்படி, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களைப் பொருத்தவரை கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும்போதும், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை. இதனால் போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உட்பட சுமார் 86 ஆயிரம் ஓய்வூதியர்கள் பொருளாதார ரீதியில் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு, பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து போராடி வருகிறோம். இதன் ஒரு பகுதியாகவே முதல்வருக்கு பதிவு தபால் அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம். கடந்த 13-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குதல் ஆகிய கோரிக்கையை முதன்மையாக முன்வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதிவுத் தபால் அனுப்பி வருகிறோம். இதுவரை எங்களது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் தலைமைச் செயலகத்தை அடைந்துள்ளன. சென்னையிலிருந்து மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை அரசு பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டும் எங்களுக்கு வந்துசேர்ந்துவிட்டது.

முதலில் 3 நாட்கள் மட்டும் கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆக.15-ம் தேதிவரை தொடர்ந்து கடிதம் அனுப்பப்படுகிறது. இதன் பின்னராவது 91 மாத கால அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE