கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் பரிதாபம் - பட்டாசு கிடங்கு வெடித்து 9 பேர் உயிரிழப்பு; 15 பேர் பலத்த காயம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் நேரிட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் 6 கடைகள் தரைமட்டமானதுடன், 10 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவைச் சேர்ந்த ரவி (46), அங்குள்ள நேதாஜி சாலையில் பட்டாசு மொத்த விற்பனைக் கடை நடத்திவந்தார். இதற்காக அங்குள்ள கிடங்கில் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்தார். இவரது கடை அருகில் 2 மரக்கடைகள், வெல்டிங் கடை, நிதி நிறுவனம், ஹோட்டல், ஷோபா தயாரிப்பு நிறுவனம், தண்ணீர் சுத்தகரிக்கும் நிறுவனம் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இந்நிலையில், நேற்று காலை கடையில் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். சுமார் 9.45 மணிக்கு கடையிலிருந்த பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்தன. சில நொடிகளில் பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறியதில், கிடங்கு மற்றும் அருகில் இருந்த 6 கடைகள் தரைமட்டமாகின. மேலும், அடுத்தடுத்து இருந்த கடைகள், வீடுகளின் மேற்கூரைகள், ஜன்னல்கள் உடைந்து சிதறின. சுமார் 2 கி.மீ. தொலைவு வரை வெடி சப்தம் கேட்டது.

இந்த விபத்தில் சிக்கிய சிலரின் உடல் பாகங்கள் சிதறி 200 அடி தொலைவுக்கு வீசப்பட்டன. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காவல், வருவாய்த் துறையினர், நகராட்சி ஊழியர்களும் வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். 4 பொக்லைன் வாகனங்கள் உதவியுடன், கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டன. உயிரிழந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், காயமடைந்தவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர்.

வெடி சப்தம் கேட்டு நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விபத்து நேரிட்ட இடத்தில் கூடினர். இதையடுத்து, பழையபேட்டை நேதாஜி சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த விபத்தில், பட்டாசு கடை நடத்திவந்த ரவி(46), அவரது மகன் ரித்திஷ்(21), மகள் ரித்திகா(19), வெல்டிங் கடை ஊழியர்கள் இப்ராஹிம்(21), இம்ரான்(18), ஹோட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி(55), தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த சரசு(35), ஜேம்ஸ், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ணகிரி பில்லனகுப்பம் சிவா (22) ஆகிய 9 பேர் உயிரிழந்தனர். ரவியின் மகள் ரித்திகா கர்ப்பணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரவியின் மனைவி ஜெய(40), பழையபேட்டை ஜாபர்(37), சபியான்(11), பெரிய மட்டாரப்பள்ளி திருப்பதி(65), இர்பான்(20), முனிரத்தினம் (33), உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைமைக் காவலர் சங்கரி(39), இம்ரான்கான்(20), தமிழ்ச்செல்வன்(26), ஜெகதீசன்(48), பார்த்திசாரதி(22), மாதேஷ்(42), ஜெயேந்திரன்(23) உள்ளிட்ட 15 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேத மடைந்தன.

இதற்கிடையே, அமைச்சர் அர.சக்கரபாணி, உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், விபத்து நேரிட்ட இடத்தைப் பார்வையிட்டார்.

விபத்து தொடர்பாக கிருஷ்ணகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், பட்டாசு கிடங்கு அருகேயுள்ள ஹோட்டலில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததால், விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது. எனினும், வேறு காரணம் உள்ளதா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சரயு கூறும்போது, "வெடி விபத்து நேரிட்ட கடைக்கு உரிமம் பெற்றுள்ளனர். உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, சரியான அளவில் வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், உரிமம் பெற சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும். அதேபோல, பட்டாசு கிடங்கும், ஹோட்டலும் அருகருகில் இருந்ததே விபத்துக்கு காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: பிரதமர், முதல்வர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் நேரிட்ட கோர விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோன சம்பவம், மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் பட்டாசு கடையில் நேரிட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்திகேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை அங்கு அனுப்பி வைத்துள்ளேன்.

விபத்தில் படுகாயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு ரூ.1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE