ராமநாதபுரம் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளர் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் - அண்ணாமலை பேச்சு

By கி.தனபாலன்


ராமநாதபுரம்: வரும் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளர் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை இன்று மாலை ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் இருந்து தொடங்கி கேணிக்கரை வழியாக அரண்மனையை வந்தடைந்தார். பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரண்மனை முன்பு அவர் பேசியதாவது, "தமிழகத்தின் மண்ணையும், மக்களையும் நேசிக்கக் கூடியவர் பிரதமர் மோடி. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.10.76 லட்சம் கோடி நிதியை பிரதமர் வழங்கியுள்ளார். பிரதமர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ் மொழி தொன்மையானது என செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார். திருக்குறளை 100 மொழிகளில் மொழிபெயர்க்க கூறியுள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் கூற்றை ஐ.நா. சபையில் தெரிவித்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார். நாடாளுமன்றத்தில் தமிழ் கலாச்சாரத்தின் செங்கோலை வைத்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த 27 மாதங்களில் ஊழல் செய்து வருகிறது. திமுக என் மண், என் மக்கள் என்பதை குடும்பத்திற்காகவும், அவர்களின் குடும்ப வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தி வருகிறது. தமிழகத்தின் இரண்டு அமைச்சர்கள் மீது அமலாகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் பொன்முடி ரூ.41 கோடி ரூபாய் வைப்பு நிதியாக வைத்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கோடிக்கணக்கில் ஊழல் செய்து சிறையில் உள்ளார். திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதை பொதுமக்களே பேசி வருகின்றனர். திமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்.

விவேகானந்தர் சிகாகோ சென்று விட்டு திரும்பும் பொழுது முதன் முதலில் ராமநாதபுரம் மண்ணிற்கு தான் வந்தார். இந்த புண்ணிய பூமியில் கிடைத்த வரவேற்பு, மோடிக்கு கிடைத்த வரவேற்பு. இங்குள்ள மக்கள் அனைவரும் இத்தொகுதியில் பிரதமர் போட்டியிட வேண்டும் என கேட்கின்றனர். இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். இங்குள்ள மக்களின் அன்பபை பிரதமரிடம் சொல்வோம். பிரதமருக்கு எதிராக 17 பேர் சேர்ந்து இந்தியா என கூட்டணி அமைத்துள்ளனர்.

அப்படி சொல்வதற்கே அர்த்தமில்லாத கூட்டணிஅது. அக்கூட்டணியில் திமுக 1965 வரை தனித் தமிழகம் வேண்டும் என்றது, காஷ்மீரின் பரூக் அப்துல்லா குடும்பம் காஷ்மீரில் தனி நாடு கேட்டது. ஏதாவது ஒரு மத்திய அரசு திட்டம் இங்குள்ள ஒவ்வொருவர் வீட்டிற்கும் வந்திருக்கும். நம் மண்ணையும், மக்களையும் யாரும் சூறையாடக்கூடாது. திமுகவை மறுபடியும் வரவிடக்கூடாது. வரும் 2024 தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அதில் முதல் தொகுதியாக ராமநாதபுரத்திலிருந்து ஒருவரை எம்பியாக அனுப்ப வேண்டும். பிரதமர் மக்களுக்கு சேவை செய்யும் தொண்டர்" எனப் பேசினார்.

அண்ணாமலை முன்னதாக வழிவிடு முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு பூரண கும்ப மாரியாதை, பால்குடம் எடுத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். வரும் வழியில் பெண்கள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். கேணிக்கரை பகுதியில் மெக்கானிக் கடையில் ஊனமுற்ற ஒரு இளைஞரை சந்தித்து உதவி செய்வதாக தெரிவித்தார். அதனையடுத்து சிகில் ராஜவீதியில் விவேகானந்தர் ஸ்தூபியில் வழிபட்டார். ராமநாதபுரம் நாடார் தெருவில் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE