மதுரை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நடுகல் கண்காட்சி நிறைவு

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை அரசு அருங்காட்சியகத்தில் இன்றுடன் முடிந்த (19 நாட்கள்) நடுகல் கண்காட்சியை 3626 பேர் பார்வையிட்டுள்ளனர். இதில் கருணாநிதிக்கு பிடித்த நடுகல் எதுவென்ற போட்டியில் 800 மாணவ, மாணவிகள் சரியாக எழுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பில் நடுகல் கண்காட்சி போட்டிகள் காந்தி மியூசிய வளாகத்தில் ஜூலை 11-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி இன்றுடன் நிறைவு பெற்றது.இந்த கண்காட்சியில் தமிழகத்தில் கிடைத்த முக்கியமான நடுகல்லின் புகைப்படம், கல்வெட்டு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கி.மு.4, 3-ம் நூற்றாண்டைச் சோ்ந்த புலிமான்கோம்பை, தாதப்பட்டி, நெகனூர்பட்டி போன்ற தமிழி நடுகற்கள்; தமிழி,    வட்டெழுத்து கலந்து எழுதப்பட்ட பறையன்பட்டு, செண்டியம்பாக்கம், தாமல், எடுத்தவாய்நத்தம், கோரையாறு, கோட்டையூர் போன்ற நடுகற்கள் உள்ளது.

வட்டெழுத்தில் அமைந்த அகரஞ்சேரி, சிறுகல் நாகலூர், நாதியானூர், பளிஞ்சரஹள்ளி, நடுப்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, மோத்தக்கல், தொரைப்பாடி, எடுத்தனூர், சே.கூடலூர் பகுதி நடுகற்கள், கோழி நடுகல், மாதிரிமங்கலம், அயன்குஞ்சரம் பகுதியில் கிடைத்த கொற்றவை வட்டெழுத்து நடுகற்கள் உள்ளது.

இக்கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 3626 பேர் பார்வையிட்டுள்ளனர். இதில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிடித்த நடுகல் எதுவென்ற போட்டி நடந்தது. இதற்கான சரியான விடையான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எடுத்தனூர் நாய் நடுகல் என்று 800 பேர் சரியாக எழுதியுள்ளனர். இதில் தினமும் 3 பரிசுகள் வீதம் 19 நாட்கள் நடந்த போட்டியில் 57 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், புத்தகமும் வழங்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE