“திமுக ஆட்சியில் 58 பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளன” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

By த.சக்திவேல்

மேட்டூர்: “அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டு 7 பாலியல் வன்கொடுமை நடந்தது. திமுக ஆட்சியில் 2021, 2022ம் ஆண்டில் 58 பாலியல் வன் கொடுமைகள் அரங்கேறியுள்ளன” என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்

சேலம் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றியம் இருப்பாளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, பாமக, தேமுததிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 1500 க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதையடுத்து கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது : “தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பேற்று, திறம்பட செயலாற்றி மக்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு அரும்பாடுபட்ட கட்சி அதிமுக. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்த அரசு அதிமுக. விடியல் பிறப்பதற்காக அதிமுக கொண்டு வந்த திட்டங்களை விடியாமல் திமுக அரசு பார்த்து கொள்கிறது. கரோனா காலத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேலையில்லாமல் இருந்தனர். அப்போது, 11 மாதங்களாக விலையில்லாமல் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம். தை பொங்கலை சிறப்பாக கொண்ட, ரூ 2,500 கொடுத்தோம்.

இன்றைய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்துள்ளனர். 2 ஆண்டு கால ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வந்தனர். குடும்ப ஆட்சியாகவும், தமிழகத்தில் சர்வதிகார ஆட்சியாகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் இல்லை. பல முதலமைச்சர்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில், அறிவித்ததில் 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டு 7 பாலியல் வன் கொடுமை நடந்தது. திமுக ஆட்சியில் 2021, 2022ம் ஆண்டில் 58 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. ஊழல் செய்த அமைச்சர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, அமைச்சராக இருப்பவருக்கு, முதலமைச்சர் வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கிறார். சிறையில் உள்ள ஒருவர் அமைச்சராக இருப்பதை பார்த்து நாடே எள்ளி நகையாடுகிறது. முதலமைச்சர் விழித்துக் கொண்டு, செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து விடுவித்தால் மக்கள் பாராட்டுவார்கள். இல்லையென்றால், வருகின்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை திமுக தலைவருக்கு தருவார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE