“நெய்வேலியில் ஒரு அங்குலம் நிலத்தை கூட எடுக்க முடியாது” - இயக்குநர் கவுதமன் ஆவேசம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “நெய்வேலியில் இனி ஒரு அங்குலம் நிலத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் கனவிலும் நடக்காது” என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை துப்பாக்கிச்சூடு நடத்தி பெரிய கலவரத்தை ஏற்படுத்தியதோ, அதற்கு வித்தியாசம் இல்லாமல் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுடன் கலவரத்தை தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது. அரசின் மீது குற்றம் சொல்வது எங்களின் நோக்கமல்ல. ஆனால் பெரும் திரளான மக்கள் போராட்டத்தை அரசும், காவல்துறையும் நினைத்திருந்தால் சரியாக கையாண்டிருக்கலாம்.

கண்ணீர் புகை வீசியது, தண்ணீரை பீய்ச்சி அடித்தது சரி. ஆனால் எதற்காக துப்பாக்கியால் சுட வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி மிக மோசமான முறையில் ஸ்டெர்லைட் போராட்டத்தை பெரும் கலவரத்துடன் அடக்கியதற்கும், நெய்வேலியில் நடத்தப்பட்டதற்கும் என்ன வித்தியாசம். ஸ்டெர்லைட்டில் நடத்தப்பட்டது போன்று, நெய்வேலியிலும் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எங்களது மக்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். ஒருவாரம் கெடு கொடுக்கின்றோம். இது தனிப்பட்ட மனிதர் சொல்வதாக நினைத்தால், தமிழக அரசல்ல, மத்திய அரசல்ல ஒட்டுமொத்தமாக அனைவரும் தலைகுனிய வேண்டி இருக்கும்.

நெய்வேலியில் இனி ஒரு அங்குலம் நிலத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் கனவிலும் நடக்காது. மீண்டும் ஒரு கலவரத்தை நெய்வேலியில் நடத்த நினைத்தால் என்.எல்.சியின் ஒரு செங்கல் கூட அங்கு இல்லாத நிலை உருவாகும். கடலூர் மாவட்ட ஆட்சியர் பேசியது மோசமான பேச்சு. 65 ஆண்டுகளாக எங்களது நிலங்களை பறித்துக்கொண்டு வேலை தருவதாக கூறி தமிழக அரசும், மத்திய அரசும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். உரிய நிவாரணம், மாற்று இடம் தரவில்லை. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எங்கள் மண்ணுக்கும், இடத்துக்கும் சம்மந்தமில்லாத கூட்டம் வேலை செய்கிறது.

ஆட்சியர் நேர்மையுடனும், நியாயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். என்.எல்.சி நிலம் கையப்படுத்தும் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விளக்கம் தர வேண்டும். இண்டியா கூட்டியாக இருந்தாலும் சரி, என்டிஏ கூட்டணியாக இருந்தாலும் சரி, இந்த மண்ணின் பூர்வக்குடி மக்களை அடிப்பதும், வளங்களை கொள்ளையடிப்பதும், கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதும் தான் இந்த கூட்டணிகள் செய்யப் போகின்றன. அவர்களுக்கு அடிமைகளாக இருக்கும் திமுக, அதிமுகவும் அதைத்தான் செய்யப்போகிறது. மணிப்பூர் கலவரம் பாஜக திட்டமிட்டு உருவாக்கியது. இதுவரை எங்களை திராவிடக் கூட்டம் அழைத்தது. இப்போது தேசிய கூட்டம் அழைக்கிறது.

இலங்கையில் தமிழினம் எவ்வாறு அழிக்கப்பட்டு கிடக்கிறதோ, அதுபோன்ற நிலை இங்கு வரப்போகிறது. ஆகவே தமிழ் நிலத்தைக் காக்க இளைய தலைமுறையினர் ஒரு புள்ளியில் நிற்க வேண்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்ற நடிகரை இதுவரை தமிழக அரசியல் பார்க்கவில்லை. அவரது நடிப்பின் ஒரு நிலைதான் என் மண் என் மக்கள் நடைபயணம். எங்கள் மண்ணையும், மக்களையும் அடகு வைக்கும் புதிய தரகராக அண்ணாமலை இருக்கின்றார். நீங்கள் சுற்றி வாருங்கள் எங்கள் மக்கள் தக்க பாடத்தை தருவார்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE