புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் ஆளுநர், முதல்வர், பாஜக அமைச்சர்கள் நாடகம்: நாராயணசாமி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் ஆளுநர், முதல்வர், பாஜகவின் அமைச்சர்கள் நாடகமாடுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் இடஒதுக்கீடு அளிக்கும் கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மத்திய உள்துறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோப்பு மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் மத்திய உள்துறை அமைச்சகம் நிலுவையில் வைத்துள்ளது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு 10 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க புதிதாக கோப்பு அனுப்பினால், அதற்கு அனுமதி அளிப்பதில் சட்டச் சிக்கல் ஏற்படும்.

ஆகவே, ஏற்கெனவே நிலுவையில் உள்ள கோப்புக்கு முதல்வர், பாஜக அமைச்சர்கள் உள்துறை அமைச்சகத்திடம் பேசி ஒப்புதல் பெற்றால் ஒழிய நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த முடியாது. பழைய கோப்பு நிலுவையில் இருக்கும் நிலையில், புதிதாக கோப்பு தயாரித்து அனுப்பினால் அதற்கு எப்படி ஒப்புதல் பெற முடியும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறவே கட்சியை ஆரம்பித்ததாக முதல்வர் ரங்கசாமி கூறினார். அதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால், தற்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.

மேலும், மாநில அந்தஸ்து தொடர்பான சட்டப்பேரவை தீர்மானக் கோப்பும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு துணைநிலை ஆளுநர் அனுப்பாமல், அந்த கோப்பை தன்னுடைய அலுவலகத்தில் வைத்துக்கொண்டு காலம் கடத்தி வருகிறார். முதல்வர் ரங்கசாமி டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டிலும் புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. இதிலிருந்து புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர், பாஜகவின் அமைச்சர்கள் நாடகமாடுகின்றனர். மாநில அந்தஸ்து பெறுவோம் என்று சொல்லி வாக்குகளை வாங்கி மக்களை ஏமாற்றுகின்றரே தவிர உண்மையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் இவர்களுக்கு இல்லை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது போல புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால் 90 சதவீத நிதி கிடைக்கும். நிதிப்பற்றாக்குறையை நம்மால் சீர்செய்ய முடியும். இரண்டரை ஆண்டுகாலம் முடிந்துவிட்டது. மத்திய அரசு இதுசம்மந்தமாக செவி சாய்க்கவில்லை. இப்போது என்.ஆர்.காங்கிரஸ் நிலைபாடு என்ன. முதல்வர் என்ன சொல்ல போகிறார். பாஜகவின் நிலைபாடு என்ன என்பது குறித்தும் அந்த கட்சியின் தலைவர்கள் மக்கள் மத்தியில் விளக்கமாக கூறவேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியின்போது நாங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்தோம். ஆனால் தற்போது இந்த அரசு புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறது. பல்கலைக்கழ துணைவேந்தர் இந்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். இதற்கு அரசு எந்தவித பதிலும் இல்லை. இவர்கள் தமிழ்மொழிக்கு விரோதிளா? தமிழ்மொழியை புறக்கணிக்கிறார்களா? இந்த புதிய கல்விக் கொள்கை வடமாநிலங்களுக்கு சாதகமாகவும், தமிழகம், புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களுக்கு பாதகமாக அமையும். ஆகவே புதிய கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது.

புதுச்சேரி குபேர் அங்காடியை வியாபாரிகள் பாதிக்காத வகையில் படிப்படியாகவே கட்டவேண்டும். பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. அனைத்துத் துறையிலும் முறைகேடு மலிந்துவிட்டது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE