போச்சம்பள்ளி அருகே குள்ளனூர் கிராமத்தில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் திறக்கப்படாமல், பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படும் சமுதாயக் கூட வளாகம். 
தமிழகம்

ரூ.18 லட்சத்தில் கட்டியும் மக்களுக்கு பயனில்லை - ‘பாம்புகளுக்கு’ வாழ்விடமான குள்ளனூர் சமுதாயக் கூடம்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே குள்ளனூர் கிராமத்தில் ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் மக்களின் பயன்பாட்டுக்கு வராததால், பாம்புகளின் வாழ்விடமாக மாறிப்போனது. போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களது இல்லத் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளைக் குறைந்த வாடகையில் நடத்த வசதியாக சமுதாயக் கூடம் கட்ட வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் சமுதாயக் கூடம் அமைக்கக் கிராம மக்கள் சார்பில் நிலம் வாங்கி பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து 2003-ம் ஆண்டு ரூ.18 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பணி நிறுத்தப்பட்டது. இதனால், சமுதாயக் கூடம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் கடந்த 20 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. தற்போது, சமுதாயக் கூடம் புதர் மண்டி, பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷஜந்துகள் வாழ்விடமாக மாறிப்போனது.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: சமுதாயக் கூடத்தில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் அப்படியே நிறுத்தப்பட்டதால், பயன்பாடில்லாமல் சேதமடைந்து வருகிறது. இரவு நேரத்தில் மது அருந்துவோரின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும், செடி, கொடிகள் மண்டிக்கிடப்பதால் பாம்புகள் அதிக அளவில் இப்பகுதியில் சுற்றி வருகின்றன. மக்களின் தேவைக்காகக் கட்டப்பட்டு பயனில்லாமல் உள்ள சமுதாயக் கூடத்தை சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம மக்களின் பன்னோக்குப் பயன்பாட்டுக்காக அனைத்து ஊராட்சிகளிலும் சமுதாயக் கூடம் கட்டுவதை அரசு முன்மாதிரி திட்டமாக முன்னெடுத்து வரும் நிலையில், குள்ளனூரில் முடங்கிக் கிடக்கும் சமுதாயக் கூடத்தைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT