‘மெட்ரோ’வில் என்ன வசதி வேண்டும்? - 33 ஆயிரம் பயணிகளிடம் கருத்துகேட்பு

By மு.வேல்சங்கர்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் 2 லட்சம் முதல் 2.60 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு செய்தும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, மெட்ரோ ரயில் பயணிகளிடம் கருத்துகேட்பு நடத்த மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, சென்னையில் 41 மெட்ரோ ரயில் நிலையங்களில் 33 ஆயிரம் பயணிகளிடம் 20 பேர் அடங்கிய மெட்ரோ ரயில் ஊழியர்கள் குழுவினர் கருத்துகேட்பு நடத்தும் பணியை கடந்த ஏப்ரலில் தொடங்கினர்.

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இந்த கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதிக அளவில் பயணிப்பவர்கள் யார், பயணிகளின் தேவைகள் என்ன என்பது குறித்த கேள்விகள் இதில் இடம்பெற்றன. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பயணிகளின் தேவை என்ன, குறைபாடுகள் என்ன என்பதை கேட்டறிந்தனர்.

50 நாட்களுக்கு இந்த கருத்துகேட்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கருத்துகேட்பு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. இதில், மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்கள், அவர்களின் கோரிக்கைகள் என்ன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:ரயில் பயணிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், 41 ரயில் நிலையங்களில் 33 ஆயிரம் பயணிகளிடம் இந்த கருத்துகேட்பு நடத்தப்பட்டது. மெட்ரோ ரயில்களில் அலுவலக பணியாளர்கள் 48 சதவீதம் பேர், கல்லூரி மாணவர்கள் 33 சதவீதம், தொழில், வியாபாரம் செய்பவர்கள் 12 சதவீதம், மூத்த குடிமக்கள் உட்பட மற்ற தரப்பினர் 6 சதவீதத்துக்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர் என்பது இதில் தெரியவந்தது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பயணிகளின் அடிப்படை தேவைகள் மாறுபடுகின்றன. வடபழனி உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்தும் வசதியை அதிகரிக்க பயணிகள் கோரியுள்ளனர்.

நெரிசல் மிகுந்த காலை, மாலை நேரங்களில் (பீக் ஹவர்ஸ்) மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள், அலுவல பணியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சில மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து வீடு மற்றும் அலுவலகம் செல்ல கார், ஆட்டோ போன்ற வாகன வசதிகள், குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் கழிவறைகள், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் கேட்டுள்ளனர். ஏற்கெனவே கருத்துகேட்பு நடத்தி, பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைக்க நடவடிக்கை எடுத்தோம்.

வரும்காலங்களில் மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாலூட்டும் அறை அமைக்கப்படும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல, சில ரயில்நிலையங்களில் ஏற்படுத்த பரிந்துரை செய்துள்ளோம். பயணிகளின் இந்த தேவைகள் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். கல்லூரி மாணவர்களுக்கு சலுகை அளிப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் இல்லை. பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதே இந்த கணக்கெடுப்பின் நோக்கம். இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE