கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து: 9 பேர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவை சேர்ந்தவர் ரவி (46). இவர் கிருஷ்ணகிரி பழையபேட்டையில் இருந்து காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலுக்கு செல்லும் நேதாஜி சாலையில் பட்டாசு குடோன் மற்றும் மொத்த விற்பனை கடை நடத்தி வந்தார். இவரது கடையை ஓட்டியவாறு 2 மரக்கடைகள், வெல்டிங் கடை, பைனான்ஸ் கடை, ஓட்டல், ஷோபா தயாரிக்கும் கடை, தண்ணீர் சுத்தகரிக்கும் நிறுவனம், குடியிருப்புகள் உள்ளன.

சனிக்கிழமை காலை பட்டாசு கடையில் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். காலை சுமார் 9.45 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. சிறிது நேரத்தில் பட்டாசு கடையில் இருந்து பட்டாசுகள் நாலபுறமும் வெடித்து சிதறின. கண் இமைக்கும் நேரத்தில் பட்டாசு குடோன், கடையை ஓட்டியிருந்த கடைகள் தரைமட்டானது.

கடையின் சிமென்ட் மேற்கூரை, பட்டாசுகள் வெடித்து சாலையில் இருசக்கர வாகனங்களில் மீது விழுந்தது. கடைகளில் இருந்த சிலரின் உடல்கள் 200 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு, உடற்பாகங்கள் சிதறிக் கிடந்தன. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை, போலீஸார், வருவாய்த் துறை, நகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டன.

நிகழ்விடத்துக்கு வந்த கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சரயு, எஸ்பி சரோஜ்குமார் தாகூர், எம்எல்ஏக்கள் திமுக மதியழகன், அதிமுக அசோக்குமார் மற்றும் போலீஸார் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். 4 பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் இடிபாடுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

9 பேர் உயிரிழப்பு: இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன், கடை நடத்தி வந்த ரவி (46) அவரது மகன் ரித்திஷ் (21), மகள் ரித்திகா (19), கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த வெல்டிங் கடை ஊழியர் இப்ராஹிம் (21), இம்ரான் (18), ஓட்டல் கடை உரிமையாளர் ராஜேஸ்வரி (55), கிருஷ்ணகிரி பில்லனகுப்பம் சிவா(22) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண், ஒரு ஆண் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ஜாபர் (37), சபியான் (11), பெரிய மட்டாரப்பள்ளி திருப்பதி (65), இர்பான் (20), பட்டாசு குடோன் உரிமையாளர் ரவியின் மனைவி ஜெயஸ்ரீ (40), முனிரத்தினம் (33), சங்கரி (39), இம்ரான்கான் (20), தமிழ்செல்வன் (26), ஜெகதீசன் (48), பார்த்திசாரதி (22), மாதேஷ் (42), ஜெயேந்திரன் (23) உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் உறவினர்ககளை சந்தித்து ஆட்சியர், எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக தம்பிதுரை எம்பி ஆகியோர் ஆறுதல் கூறினர்.

சிலிண்டர் வெடித்தது காரணமா? - பட்டாசு குடோன் வெடித்து சிதறிய விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மின் கசிவால் விபத்து நடந்ததாகவும், பட்டாசுகளை வைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தால் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, அருகில் உள்ள ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததின் காரணமாகவே இந்த கோர விபத்து நடந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஓட்டலில் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் வெடித்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததா என கிருஷ்ணகிரி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 நாட்களுக்கு மாங்கனி கண்காட்சி ரத்து: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி நகரில் இன்று பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தும், பலர் படுகாயம் அடைந்ததாலும் நகரமே சோகத்தில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி நகரில் இன்று (29ம் தேதி), நாளை (30ம் தேதி) மாங்கனி கண்காட்சியில் எநத நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலா ரூ.3 லட்சம் - அரசு அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு, போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று (29-7-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை அனுப்பிவைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE