”திமுகவின் ஊழல் தமிழக மக்கள் முன்பு வெளிவந்திருக்கிறது” - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

By செய்திப்பிரிவு

ராமேஸ்வரம்: "திமுகவினர் செய்த பல கோடி மதிப்பிலான ஊழல் தமிழக மக்கள் முன்னால் வெளிவந்திருக்கிறது. அண்ணாமலை பதிவிடும் ஒரு ட்வீட்டால் பூகம்பம் ஏற்படுகிறது என்றால், பல கிலோமீட்டர் அவர் நடக்கப்போகிறார். அப்போது உங்களுக்கு என்னவாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் ஸ்டாலின்" என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்கவிழா பொதுக் கூட்டம் ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. இதில் கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியது: "உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழியில் பேச முடியாததற்காக, உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ராமநாதசுவாமியின் அருளாசியுடன், மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் செல்லவிருக்கிறார். ‘என் மண், என் மக்கள்’நடைபயணம் வெறும் அரசியல் சார்ந்த நடைபயணம் அல்ல. ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம், உலகின் பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான நடைபயணம்.

இந்த நடைபயணம், தமிழகத்தின் பண்பாட்டை, கலாசாரத்தை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும், கொல்கத்தாவில் இருந்து சோமநாத் வரையிலும் கொண்டு சேர்க்கும் நடைபயணம். 130 கோடி இந்திய மக்களின் மனதில், ஒரு மரியாதையை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் நடைபயணம். ‘என் மண், என் மக்கள்’நடைபயணம், தமிழகத்தில் இருக்கும் குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயணம். இந்த நடைபயணம், தமிழகத்தை ஊழலில் இருந்து விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்டும் ஒரு நடைபயணம். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயணம் இது.

ஊழல் வாதிகளை ஒழித்து, ஏழை எளிய மக்களின் நலனைப் பாதுகாக்கும் ஒரு அரசை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயணம், இந்த ‘என் மண், என் மக்கள்’நடைபயணம். இன்று இந்த பயணத்தை தொடங்கும் மாநில தலைவர் அண்ணாமலை, 700 கி.மீட்டர் தூரம், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் சாதனைகளை கொண்டு செல்லவிருக்கிறார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை கொண்டு வருவதற்காகத்தான் இந்த நடைபயணம். அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தின் மூலம், பாரம்பரியம் மிக்க தமிழ் மொழி, கலாசாரத்தை மேலும் வளப்படுத்தி, தமிழக மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் சாதனை மற்று வளர்ச்சியினையும் கொண்டு சேர்க்கவிருக்கிறார். பிரதமர் மோடி, தமிழ் மொழியின் பழமையை, சிறப்பினை உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று முழங்கியிருக்கிறார்.

ஐ.நா. சபையில், உலகின் பழமையான மொழி தமிழ் மொழி என்று பேசியவர் பிரதமர் நரேந்திர மோடி. ஜி20 கூட்டங்கள் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது. அதன் முத்திரை வாசகமான "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை பிரதமர் ஐ.நா சபையில் முழங்கினார். திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவித்து பெருமைபடுத்தியவர் பிரதமர் மோடி.

வடக்கு இலங்கையில் தமிழக மக்களின் பாரம்பரியத்தைக் காப்பதற்காக ரூ.120 கோடி மதிப்பீட்டில், கலாசார மையத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளார். காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் மூலம் தமிழின் பெருமையை இந்தியாவின் வடக்கிலும், மேற்கிலும் பரப்பியவர் பிரதமர் மோடி. பப்புவா நியு கினியா நாட்டுக்குச் சென்ற பிரதமர், திருக்குறளை அந்த நாட்டு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் பாரம்பரிய கலாசாரம் கொண்ட தமிழின் பெருமை பற்றி அந்நாட்டு மக்கள் தெரிந்து கொள்கின்றனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவியதன் மூலம், தமிழ் கலாசாரம், பண்பாட்டின் பெருமைகளை நமது நாடாளுமன்றத்தில் அரங்கேற்றியிருக்கிறார் பிரதமர். கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில், சாதியவாதம், குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி இவைகளுக்கு எதிராக தனது பணியை முடுக்கி விட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பழைய யுபிஏ கூட்டணி. பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இந்த கூட்டணி, 12 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறது.காங்கிரஸ் கட்சிக்கும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் மக்களிடம் வாக்குகள் கேட்டுச் செல்லும்போது உங்களுடைய 2ஜி ஊழல்தான் நினைவுக்கு வரும். காமன்வெல்த் போட்டிகளில் நீங்கள் செய்த ஊழல்தான் நினைவுக்கு வரும். எப்போதெல்லாம் நீங்கள் மக்களிடத்தில் வாக்குகள் சேகரிக்க செல்கிறீர்களோ, அவர்களுக்கு நிலக்கரியில் நீங்கள் செய்த ஊழல்தான் நினைவுக்கு வரும்.

ஹெலிகாப்டர் ஊழல்தான் நினைவுக்கு வரும். மக்களிடம் வாக்கு கேட்டும் செல்லும் போதெல்லாம் நீங்கள் செய்த ஊழல்கள்தான் அவர்களுக்கு நினைவுக்கு வரும். இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் செய்த ஊழல்தான் மக்களுக்கு நினைவுக்கு வரும். இந்த கூட்டணிதான், அரசியலமைப்புச் சட்டம் 370-ஐ நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதே யுபிஏ அரசுதான், இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட காரணமாக இருந்தார்கள். தமிழக மீனவர்கள் பட்ட துன்பங்களுக்கு காரணம், யுபிஏ அரசும், திமுகவும்தான். இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாட்டை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று விரும்பவில்லை. அவர்களது குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று ஆசை. முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது மகன் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பது விருப்பம். லாலு பிரசாத்துக்கு அவருடைய மகன் தேஜஸ்வியை பிஹார் முதல்வராக்க வேண்டும் என்று விருப்பம். மம்தா பானர்ஜிக்கு அவரது மருமகனை மே.வங்க முதல்வராக்க வேண்டும் என்பது விருப்பம். உத்தவ் தாக்கரேவுக்கு அவருடைய மகனை மகாராஷ்டிரா முதல்வராக்க வேண்டும் என்று விருப்பம்.

இந்த கூட்டணியில் இருப்பவர்கள், இந்தியாவையோ, தமிழகத்தையோ வலுப்படுத்த நினைக்கவில்லை. தங்களது மகன், மகள் அல்லது மருமகனை வளப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த நாடு, தமிழகத்தை வளர்ச்சி அடைய செய்யவும், மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கவும் நினைக்கும் ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே.

தமிழகத்தை ஆட்சி செய்யும் தற்போதைய அரசு ஊழல் மிகுந்ததாக இருக்கிறது. உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக இருக்கிறது. திமுக அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சர் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவரை இப்போதும் தமிழக அரசு, அமைச்சரவையில் அமைச்சராக வைத்துள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.

சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்கலாமா? அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?ஆனால், முதல்வர் ஸ்டாலின் அவரது ராஜினாமாவை ஏற்கமாட்டார். அவரது ராஜினாமா கடிதத்தை ஸ்டாலின் வாங்கினால், அவர் அனைத்து ரகசியங்களையும் சொல்லவிடுவார். இதனால்தான், அவரது ராஜினாமாவை ஸ்டாலின் பெற மறுக்கிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரே ஒரு ட்வீட் போட்டால், திமுக ஆட்சிக்கு பூகம்பம் ஏற்படுகிறது.

திமுகவினர் செய்த பல கோடி மதிப்பிலான ஊழல் தமிழக மக்கள் முன்னால் வெளிவந்திருக்கிறது. அண்ணாமலை பதிவிடும் ஒரு ட்வீட்டால் பூகம்பம் ஏற்படுகிறது என்றால், பல கிலோமீட்டர் அவர் நடக்கப்போகிறார். அப்போது உங்களுக்கு என்னவாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் ஸ்டாலின். இந்த ஆட்சி ஊழல் பேர்வழிகள், குற்றம் புரிவோரின் ஆட்சி. இந்த அரசு மாஃபியாக்களின் அரசு. திமுக அரசு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் ஊழல் செய்திருக்கிற அரசு. ஏழை எளிய மக்களுக்கு விரோதமான அரசு இது.

திமுக தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவானது? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஊழல் செய்து கொண்டிருக்கிறீர்கள். 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸும், திமுகவும் தமிழகத்துக்கு எத்தனை ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தீர்கள்? 2004-2014 ஆண்டுகளில் 9 லட்சத்து 49 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகையை பாஜக அரசு மூன்று மடங்கு உயர்த்தி வழங்கியுள்ளது" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்