நியோ - மேக்ஸ் மோசடியில் தலைமறைவு நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம்: உயர் நீதிமன்றத்தில் குவியும் இடையீட்டு மனுக்கள்

By கி.மகாராஜன் 


மதுரை: நியோ- மேக்ஸ் மோசடி வழக்கில் தலைமறைவு நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பிலும், பாதிக்கப்பட்டோர் தரப்பிலும் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகர் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ-மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கரேஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் இந்த வழக்கில் பாலசுப்பிரமணியன், பழனிச்சாமி, அசோக்மேத்தா பஞ்சய், சார்லஸ், தியாகராஜன், கமலக்கண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் தரப்பில், ரூ.10 கோடி வைப்பு நிதி வழங்கவும், முதலீட்டாளர்களுக்கு சொத்துக்களை வழங்க தயாராக உள்ளோம். அதை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி அல்லது பணியிலுள்ள நீதிபதியை நியமிக்க வேண்டும். அதுவரை எங்களை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கூடுதல் அரசு வழக்கறிஞர் ரவி ஆகியோர் வாதிடுகையில், ''விசாரணை தொடக்க நிலையில் தான் உள்ளது. 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். மனுதாரர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். 19 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள், பணம் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பணப் பரிமாற்றங்களும் நடந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை புகார் அளிக்கக்கூடாது என மிரட்டி வருகின்றனர். புகார் அளித்தால் பணம் திரும்ப கிடைக்காது என கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தயங்கி வருகின்றனர்.

இதனால் எவ்வளவு கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை. இதனால் மதுரையில் புகார் அளிக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. விருதுநகரில் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்டங்கள் வாரியாக சிறப்பு முகாம் நடத்தி புகார்களை பெற உள்ளோம். பல்வேறு பெயர்களில் 138 கம்பெனிகள் நடத்தி பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பணியிலுள்ள நீதிபதியை நியமிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. முன்ஜாமீன் மனுவை மட்டுமே விசாரிக்க முடியும். சோதனை நடந்த இடங்களில் ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை. அவற்றை பதுக்கியுள்ளனர். இதனால் முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது'' என்றார்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், ''ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் முதலீடு வசூல் செய்துள்ளனர். சொத்துக்களை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது'' என்றார். இதையடுத்து நியோ-மேக்ஸ் மோசடி வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஆகஸ்ட் 4-க்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்