நெய்வேலி வன்முறை | கைது, தடியடி, அடக்குமுறைகளால் பாமகவை கட்டுப்படுத்த முடியாது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: “பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகைக் குண்டுவீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பாமகவை கட்டுப்படுத்த முடியாது” என்று நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்எல்சி விரிவாக்கத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பாமகவினர் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க அரசும், காவல் துறையும் முயன்றால் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும்.

காவிரிப் பாசனப் பகுதிகளின் அங்கமான சேத்தியாத்தோப்பு பகுதியில், நன்றாக விளைந்து கதிர்விடும் நிலையில் உள்ள நெற்பயிர்களை ராட்சத எந்திரங்களைக் கொண்டு அழித்து நிலங்களை கைப்பற்றிய என்எல்சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையையும், அத்துமீறலையும் மனசாட்சியுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்எல்சி நிறுவனத்தின் அத்துமீறலைக் கண்டித்து தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை எடுத்த முடிவின் அடிப்படையில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி என்எல்சி நுழைவாயிலில் அறப்போர் நடத்தப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போதிலும், போராட்டம் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பேசி முடித்த பிறகு என்எல்சியை முற்றுகையிட அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் முயன்ற போது, அதை காவல்துறை அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், என்எல்சி நிறுவனத்தின் ஏவலர்களாக மாறி மருத்துவர் அன்புமணி ராமதாஸையும், அவருடன் சென்ற பாமகவினரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அதனால், பதற்றம் அதிகரித்த நிலையில், பாமக தொண்டர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது தான் நிலைமை மோசமடைய காரணம் ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு தொண்டரை பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சூழ்ந்துகொண்டு கண்மூடித்தனமாக தாக்கினார்கள். அவரது ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. அந்தக் காட்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப் பட்டன. அதைத் தொடர்ந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

என்எல்சி நிறுவனத்திற்கு எதிராகவும், மண்ணையும், மக்களையும் காப்பதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தைக் கையாள்வதில் காவல்துறையினரின் அணுகுமுறையும், அத்துமீறலும் கண்டிக்கத்தக்கவை. இத்தகைய சீண்டல்களின் மூலம் பாமக போராட்டத்தை அடக்கி விட முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்திருப்பது என்எல்சி என்ற ஒற்றை நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் அல்ல.

தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டும்; புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும்; இவை அனைத்திற்கும் மேலாக கடலூர் மாவட்ட மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடத்தப்படும் போராட்டம் ஆகும். இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி கிடைக்கும் வரை பாமகவின் போராட்டம் தொடரும். மக்களின் உணர்வுகளை மீறி அவர்களின் மண்ணைப் பறிக்க முயன்றால் என்ன நடக்கும் என்பதற்கு மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் மற்றும் சிங்கூர் அனுபவங்கள் தான் சான்று. அந்த அனுபவத்தில் இருந்து தமிழ்நாடு அரசும், என்எல்சி நிறுவனமும் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், மண்ணின் மகத்துவம் குறித்தும், மக்களின் உணர்வுகள் குறித்தும் எதையும் அறியாத என்எல்சியும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் உணவு வழங்கும் பூமித்தாயை எந்திரங்களைக் கொண்டு பிளந்தெறிந்த காட்சியை சகித்துக்கொள்ள முடியாது. இத்தகைய அத்துமீறல்களுக்கு தமிழக அரசு துணைபோகக் கூடாது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்ட நிலையில் என்எல்சி நிறுவனம் இனி தேவையில்லை. உடனடியாக அந்த நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் விருப்பம் ஆகும். இதை தமிழக அரசு புரிந்து கொண்டு மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மாறாக என்எல்சியின் அத்துமீறல்களுக்கு துணை போகக் கூடாது.

மீண்டும், மீண்டும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பாமகவை கட்டுப்படுத்த முடியாது. வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும்; என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. இறுதி வெற்றி கிடைக்கும் வரை அறவழியில் போராட்டம் தொடரும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி எச்சரிக்கை: "கதிர்விடும் நிலையில் இருக்கும் நெற்பயிர்களை அழிப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால்தான் இங்கு வந்திருக்கிறோம். எனவே அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய விளைவுகளை சந்திக்கக்கூடும்" என்று கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார். | வாசிக்க > நிலம் கையகப்படுத்துதலை என்எல்சி நிறுத்தாவிட்டால் மிகப் பெரிய விளைவுகள்: அன்புமணி எச்சரிக்கை

முன்னதாக, நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் இன்று முற்றுகை போராட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது என்எல்சி நுழைவாயில் முன்பு தனது தொண்டர்களுடன் நுழைய முற்பட்ட அன்புமணி ராமதாஸ் போலீசார் தடுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு இடைய அன்புமணி ராமதாசை கைது செய்ய வாகனம் வரவழைக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள், காவல் துறை வாகனத்தை கண்ணாடி அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. போலீசார் அவர்களை மிரட்டி அடித்தனர். சிறிது நேரத்தில் அன்புமணி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அவரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, பாமகவினர் அவரை கைது செய்யக்கூடாது என்று வலியுறுத்தி வாகனம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். | விரிவாக வாசிக்க > என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வன்முறை: அன்புமணி கைது; பாமகவினர் - போலீஸ் மோதலால் பதற்றம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்