நிலம் கையகப்படுத்துதலை என்எல்சி நிறுத்தாவிட்டால் மிகப் பெரிய விளைவுகள்: அன்புமணி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நெய்வேலி: "கதிர்விடும் நிலையில் இருக்கும் நெற்பயிர்களை அழிப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால்தான் இங்கு வந்திருக்கிறோம். எனவே அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய விளைவுகளை சந்திக்கக்கூடும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்த்தித்த அவர் கூறியது: "எங்களுடைய நோக்கமே, இனி விளை நிலங்களை தமிழக அரசு என்எல்சிக்காக எடுத்துக் கொடுக்கக்கூடாது. என்எல்சி நிர்வாகம், 66 ஆண்டுகாலம் தமிழகத்தில் இயங்கி, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும் அழித்துவிட்டது.

8 அடியில் கிடைத்துக் கொண்டிருந்த நிலத்தடி நீர், இன்று கடலூர் மாவட்டத்தில் 800 அடிக்குச் சென்றுவிட்டது. அதற்கு காரணம் என்எல்சி. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது. என்எல்சியால், இந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரம் கிடையாது.

கடலூர் மாவட்டத்தை தொடர்ச்சியாக அழித்துக் கொண்டிருக்கும் இந்த என்எல்சி நிர்வாகம் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் மேல், தமிழகம் இன்று மின்மிகை மாநிலகமாக மாறியிருக்கிறது. இதை அமைச்சரே கூறியிருக்கிறார். மின்மிகை மாநிலமாக தமிழகம் இருப்பதால், வெளி மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்வதாக அமைச்சர் கூறியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, இங்கு என்எல்சி நிர்வாகமே தேவையில்லை.

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை, சூரிய ஒளி, காற்றலை, கடல், நீரிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம். மின் உற்பத்தி செய்ய எத்தனையோ மாற்றுவழிகள் உள்ளன. ஆனால், சோற்றுக்கு ஒன்றுதான், நிலம்தான். அந்த நிலத்தைப் பாதுகாக்கத் தான் பாமக இன்று போராட்டம் நடத்தி வருகிறது. ஓராண்டு காலமாக பலவகை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம் என எல்லாமே செய்தாகிவிட்டது. ஆனால், இரண்டு நாட்களாக தமிழக அரசு, ஆயிரக்கணக்கான காவல் துறையினரை ஏவிவிட்டு, விவசாயிகளை அச்சுறுத்தி விளைநிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

கதிர்விடும் நிலையில் இருக்கும் நெற்பயிர்களை அழிப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால்தான் இங்கு வந்திருக்கிறோம். எனவே அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கக்கூடும். மேற்கு வங்கத்தில் நடந்த சிங்கூர், நந்திகிராம் போன்ற சூழல் தமிழகத்தில் வரக்கூடாது. எனவே தமிழக அரசுக்கு நான் எச்சரிக்கை கொடுக்கிறேன்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் இன்று முற்றுகை போராட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது என்எல்சி நுழைவாயில் முன்பு தனது தொண்டர்களுடன் நுழைய முற்பட்ட அன்புமணி ராமதாஸ் போலீசார் தடுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு இடைய அன்புமணி ராமதாசை கைது செய்ய வாகனம் வரவழைக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள், காவல் துறை வாகனத்தை கண்ணாடி அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. போலீசார் அவர்களை மிரட்டி அடித்தனர். சிறிது நேரத்தில் அன்புமணி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அவரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, பாமகவினர் அவரை கைது செய்யக்கூடாது என்று வலியுறுத்தி வாகனம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். | விரிவாக வாசிக்க > என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வன்முறை: அன்புமணி கைது; பாமகவினர் - போலீஸ் மோதலால் பதற்றம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்