கோடநாடு வழக்கு விசாரணை செப்.8-க்கு ஒத்திவைப்பு: தற்போதைய நிலை என்ன?

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என நடைபெற்று வந்த கோடநாடு வழக்கு விசாரணை, தற்போது விரிவுபடுத்தப்பட்டு மேற்கு வங்கத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அத்துடன், கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசு தரப்பில் கால அகவாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. கடந்த மாதம் ஜூன் 23-ம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், சிபிசிஐடி போலீஸார் இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை இன்று நடைபெறும் விசாரணையில் இடைக்கால அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் இல்லாததால், குடும்ப நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸின் மற்றொரு குழு மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தி வருவதால், விசாரணையை மேலும் விரிவுபடுத்த சிபிசிஐடி போலீஸார் தலைமையில் கூடுதல் கால அகவாசம் கேட்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஸ்ரீதரன், இவ்வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, "தற்போது வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் புலன் விசாரணை குறித்து நீதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டது, மேலும், வழக்கு சம்பந்தமாக ஏற்கெனவே ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்ட நிலையில், ஆதாரங்கள் குறித்தும் எலக்ட்ரானிக் உரையாடல்கள் குறித்தும் குஜராத் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அறிக்கைகள் பெறவேண்டிய நிலை உள்ளது, புலன் விசாரணை தொடர்பாக 19 செல்போன் டவர்களின் லொகேஷன்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. என்பதை நீதிபதி ஸ்ரீதரிடம் கூறினோம். இதனை கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்" என்றார். இன்று நடந்த வழக்கு விசாரணை நீண்ட நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE